Palak Spinach Pulao ; கோடி நன்மை வழங்கும் "பாலக் புலாவ்" செய்யலாம் வாங்க!

By Dinesh TGFirst Published Nov 7, 2022, 11:58 AM IST
Highlights

அசத்தலான சுவையில் பாலக் புலாவ் செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

சைவ வகைகளில் புலாவ் மற்றும் பிரியாணி ஆனது முக்கிய உணவு வகைகள் ஆகும். சைவ உணவு வகையான புலாவில் , பட்டாணி புலாவ், மஷ்ரும் புலாவ், சோயா புலாவ், வெஜ் புலாவ் என்று சாப்பிட்டு இருப்பீர்கள். பாலக் சேர்த்து புலாவ் செய்துள்ளீர்களா?

பாலக் போன்ற கீரை வகைகளை பொதுவாக குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். எனவே இந்த மாதிரி, அவர்கள் விரும்பி உண்ணக்கூடிய புலாவ் போன்ற உணவு வகைகளில், பாலக் சேர்த்து செய்தால், சத்தும், சுவையும் ஒரு சேரக் கிடைத்து விடும். 

அசத்தலான சுவையில் பாலக் புலாவ் செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்:

சீரக சம்பா ரைஸ் - ஒரு கப் 
பாலக் கீரை - 1 கட்டு 
வெங்காயம் - 1
தேங்காய் - 1/2 முடி (துருவியது)
சீரகம் - 1 ஸ்பூன் 
இஞ்சி -1 இன்ச் 
பூண்டு - ஒரு பல்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு:

எண்ணெய் - தேவையான அளவு
பிரிஞ்சி இலை - 4
பட்டை - 2

செய்முறை:

முதலில் அரிசியை கழுவி விட்டு, 10 நிமிடம் ஊற வைத்து கொள்ள வேண்டும்.பாலக் கீரையைஅலசி விட்டு, மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்சி ஜாரில் இஞ்சி, பூண்டு துருவிய தேங்காய் மற்றும் சீரகம் சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து , எண்ணெய் ஊற்றி, காய்ந்தபின் பிரிஞ்சி இலை, பட்டை சேர்த்து தாளித்து விட வேண்டும்

பின் அதில் மெல்லிய நீளமாக வெட்டி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட வேண்டும். பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதினை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பின் அதில் பச்சை மிளகாய், பொடியாக அரிந்து வைத்துள்ள கீரையை சேர்த்து வதக்கி விட வேண்டும். 

இப்போது கடாயில் 2 கப் தண்ணீர் ஊற்றி , தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன், கழுவி ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து , ஒரு தட்டு போட்டு மூடி வேக விட வேண்டும். தண்ணீர் அனைத்தும் வற்றிய நிலையில், அரிசி நன்கு வெந்து இருக்கும், இப்போது அடுப்பினை ஆஃப் செய்து விட வேண்டும். ஒரு 10 நிமிடம் கழித்து தட்டினை எடுத்து விட்டு நன்றாக கிளறி விட்டால், சுவையான பாலக் புலாவ் ரெடி!!

click me!