சத்தான வரகரிசி பருப்பு அடை செய்யலாம் வாங்க!

By Dinesh TGFirst Published Nov 14, 2022, 4:54 PM IST
Highlights

சிறுதானிய வகையான வரகரிசி மற்றும் பருப்பு சேர்த்து சத்தான அடையை எப்படி சுவையாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 
 

நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் காலை உணவினை சத்தானதாக சாப்பிட்டால், நாம் அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக மற்றும் உற்சாகமாக இருக்கலாம்.அப்படி சத்தான உணவுகளை சமைக்க வேண்டுமென்றால் சிறுதானியங்கள் சேர்த்து காலை உணவை செய்வது தான் சிறந்த தேர்வாக இருக்கும்.

வரகரிசியானது நம் உடல்நிலையை சிறப்பாக இயங்க செய்யவும், மேலும் உடலின் எல்லா உறுப்புகளும் சீரான முறையில் இயக்க  துணை புரிகிறது.
 உடலுக்கு அத்தியாவசியமான இரும்பு சத்து, வைட்டமின் சத்து, தாதுக்கள், கால்சியம்,பாஸ்பரஸ் போன்ற சத்துக்களை வரகரிசி நமக்கு அளிக்கிறது. வரகரிசி உணவினை அடிக்கடி எடுத்துக் கொண்டால், நாம் ஆரோக்கியமான ஒரு சிறந்த வாழ்வை மேற்கொள்ள முடியும். 

வரகரிசி போன்ற சிறு தானியங்கள் அளவில் சிறிதாக இருந்தாலும், அரோக்கியத்தில் பெரிய அளவில் நன்மை பயக்கும். அப்படிப்பட்ட சிறுதானிய வகையான வரகரிசி மற்றும் பருப்பு சேர்த்து சத்தான அடையை எப்படி சுவையாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

வரகரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப் 
கடலைப் பருப்பு - 1/4 கப்
பாசிப் பருப்பு - 1/4 கப் 
அவல் - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
பெருங்காயத் தூள் - 3 சிட்டிகை 
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
மல்லித்தழை - சிறிது (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது
சோம்பு -1 ஸ்பூன்
இஞ்சி - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு 

சுவையான “ஆல்மண்ட் பெப்பர் கிரேவி சிக்கன் " செய்யலாம் வாங்க

செய்முறை:

முதலில் வரகரிசி மற்றும் பருப்புக்களை அலசிக் கொண்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் அவலையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி கிட்டத்தட்ட 4 மணி நேரங்கள் அனைத்தையும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 

வெங்காயம் மற்றும் கருவேப்பிலையை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சியை தோல் நீக்கி அலசி விட்டு, துருவி வைத்துக் கொள்ள வேண்டும். கொத்தமல்லியை மிக சிறிதாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 

பின் அரிசி மற்றும் பருப்புகள் அனைத்தையும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டிக் கொண்டு, ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொண்டு, உப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து அரைத்துக் கொண்டு, ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். 

அரைத்த மாவினை,சிறிது சோம்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொண்டு, கிட்டத்தட்ட 2 மணிநேரங்கள் வரை தனியாக வைத்துக் கொண்டு, பின் 
மாவு உள்ள பாத்திரத்தில் துருவிய இஞ்சி, பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஆகியவற்றை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

அடுப்பில் தோசைக்கல் வைத்து, தோசைக்கல் சூடானபின் அதில் சிறிது எண்ணெய் தடவி, தயார் நிலையில் இருக்கும் அடை மாவினை தோசை போல் ஊற்றி, சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி, அடுப்பினை சிம்மில் வைத்துக் கொண்டு , முன் புறம் மற்றும் பின் புறம் வேக விட்டு எடுத்தால் சுவையான சத்தான வரகரிசி பருப்பு அடை ரெடி!

click me!