வாருங்கள்! சுவையான வாழைப்பூ உருண்டை குழம்பு ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து சலித்து விட்டதா? அப்பப்ப கொஞ்சம் வித்தியாசமாக சமைத்தால் தான் வீட்டில் இருக்கும் குட்டிஸ்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். எப்போதும் ஒரே மாத்திரை சமைத்தால் முகம் சுளித்து தான் சாப்பிடுவார்கள்.
பொதுவாக வாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை கொண்ட காயினை குழந்தைகள் சாப்பிட தயக்கம் காட்டுவார்கள். எனவே அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய விதத்தில் சமைத்து தந்தால் கப்சிப் என்று சத்தம் மில்லாமல் சாப்பிட்டு முடிப்பார்கள்.
வழக்கமாக வாழைப்பூ வைத்து பொரியல், வடை போன்றவை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இன்று சற்று வித்தியாசமாக வாழைப்பூ வைத்து உருண்டை குழம்பு செய்ய உள்ளோம். என்ன! வாழைப்பூ வைத்து உருண்டை குழம்பா? என்று நினைக்கிறீர்களா?
ஆமாங்க . வாழைப்பூ வைத்து செய்யப்படும் இந்த உருண்டை குழம்பு சாதத்திற்கு ஊற்றி சாப்பிட ஒரு நல்ல தேர்வு மற்றும் நல்ல மாற்றாக இருக்கும். வாருங்கள்! சுவையான வாழைப்பூ உருண்டை குழம்பு ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 100 கிராம்
துவரம் பருப்பு - 100 கிராம்
கடலைப்பருப்பு - 4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 3 பற்கள்
இஞ்சி - 1 இன்ச்
குழம்பிற்கு...
வெங்காயம் - 1
தக்காளி - 1
புளி - 1 நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு - 1/2 ஸ்பூன்
வெந்தயம் - 1/4ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயத் தூள் - சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து அதனை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பௌலில் கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி சுமார் 2 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சின்ன கிண்ணத்தில் புளி சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, கெட்டியான கரைசல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு வாணலி வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி சூடான பின் , அதில் அரிந்து வைத்துள்ள வாழைப்பூ சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.1 மிக்சி ஜாரில் ஊற வைத்துள்ள பருப்புகளை சேர்த்துக் கொண்டு அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, இஞ்சி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அரைத்த பருப்பு கலவையை வதக்கி வைத்துள்ள வாழைப்பூவுடன் சேர்த்து நன்றாக பிசைந்து, ஒரே அளவிலான சிறிய உருண்டைகளாக சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
இப்போது உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் 1 வாணலி வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி ,எண்ணெய் காய்ந்த பின்னர் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து விட்டு வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கி .இப்போது சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் சிறிது குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு புளிக் கரைசல் சேர்த்து கொதி வைக்க வேண்டும்.
குழம்பு கொஞ்சம் கெட்டியாக வந்த பிறகு வேக வைத்து எடுத்துள்ள உருண்டைகளை சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து இறக்கினால், டேஸ்ட்டான வாழைப்பூ உருண்டை குழம்பு ரெடி!
Kidney Stone : வெறும் 7 நாளில் கிட்னி ஸ்டோன் கரைக்கும் இரணக்கள்ளி மூலிகை பற்றி தெரியுமா!