சிறுதானியங்களில் ஒன்றான கம்பு வைத்து ருசியான கம்பு சாம்பார் சாதம் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நமது தினசரி வாழ்வில் நம்மில் பலரும் பெரும்பாலும் அரிசி, கோதுமை போன்ற தானியங்களை வைத்து உணவுகள் சமைத்து சாப்பிடுகிறோம். அரிசி,கோதுமை தவிர பல விதமான தானியங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பல்வேறு சிறுதானியங்கள் உள்ளன.
சிறுதானியங்கள் ஒவ்வொன்றும் நமக்கு பல விதமான சத்துக்களை தருகின்றன.இதில் அதிகளவு நார்ச்சத்து, புரதச்சத்து உள்ளதால் அரிசி போன்ற உணவுகளுக்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும். மேலும் இதில் அதிக அளவில் கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின்கள் உள்ளன .
சிறுதானிய உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் பல விதமான வியாதிகளில் குறிப்பாக சர்க்கரை நோய், உடல் எடை பருமன் போன்றவற்றை கட்டுக்குள் வைத்துக் கொளல் முடியும். மேலும் அபாயமான, குணப்படுத்த முடியாத புற்று நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. இன்னும் பல விதமான ஆரோக்கிய நலனை தரும் சிறுதானியங்கள் வைத்து ஒரு ரெசிபியை செய்ய உள்ளோம்.
சிறுதானியங்களில் ஒன்றான கம்பு வைத்து ருசியான கம்பு சாம்பார் சாதம் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
கம்பு - 1 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
மிளகாய்த்தூள் - 1/2ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
தனியாத்தூள்- 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
கடுகு-1 /2 ஸ்பூன்
சீரகம் -1/2 ஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லித்தழை- கையளவு
புளி - லெமன் சைஸ்
உப்பு தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
முதலில் துவரம்பருப்பு மற்றும் கம்புஆகியவற்றை தண்ணீரில் அலசிக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் துவரம்பருப்பு மற்றும் கம்பு சேர்த்து இரண்டும் மூழ்கும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் புளி சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து புளிக்கரைசல் எடுத்து கொள்ள வேண்டும்.
பின் அதில் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மூடிவிட்டு 4 விசில் வைத்து வேக வைக்க வேண்டும். 4 விசில் வந்த பிறகு குக்கரினை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு விசில் அடங்கிய பிறகு குக்கரை திறந்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடான பின்பு, கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் வேர்க்கடலை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது கடாயில் புளிக்கரைசல் ஊற்றி அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், தனியாத் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு பின் கொதிக்க வைக்க வேண்டும். கொஞ்சம் கொதித்த பிறகு அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள கம்பினை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் நன்றாக கிளறி விட்டு அதன் மேல் மல்லித்தழை தூவி பரிமாறினால் சத்தான கம்பு சாம்பார் சாதம் ரெடி!