பெண்களின் வரப்பிரசாதமான கேழ்வரகு வைத்து சத்தான அடை செய்யலாமா !

By Dinesh TGFirst Published Jan 22, 2023, 7:24 PM IST
Highlights

வாருங்கள்! சத்தான கீரை ராகி அடை ரெசிபியை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நாம் காலை உணவினை ஊட்டச்சத்து மிக்க உணவாக எடுத்துக் கொண்டால் தான் அன்றைய தினம் முழுவதும் உற்சாகமாகவும். புத்துணர்ச்சியாகவும் இருக்க முடியும். சிறு குழந்தைகள், பருவமடைந்த பெண் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலுட்டும் தாய்மார்கள்,வயது முதிர்ந்த பெண்கள் என்று அனைத்து வயது பெண்களுக்கும் ஏற்ற உணவு. மேலும் அனைத்து சத்துகளைத் தரும் ஒரு உணவு என்றால் அது கேழ்வரகு எனப்படும் ராகி தான்.

பெண்களுக்கு இயற்கையாக தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் தன்மை கொண்டது. மேலும் மாதவிடாய், குழந்தைபேறு, காலங்களில் ஏற்படும் அதிகப்படியான ரத்தபோக்கு ஏற்படுவதால் ஹீமோகுளோபின் அளவில் சற்று தாழ்வு நிலை இருக்கும்.அதனை சரிசெய்ய கேழ்வரகு தான் சிறந்த உணவவாகும்.

வாருங்கள்! சத்தான கீரை ராகி அடை ரெசிபியை வீட்டில் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்:
 

  • ராகி மாவு - 1 கப்
  • வெள்ளை அவல் - 1/2 கப்
  • வெங்காயம் - 1
  • சீரகம் - 1/2 ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • கேரட் - 1 துருவியது
  • முருங்கைக்கீரை - கையளவு
  • புதினா-கையளவு
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு

அனைவருக்கும் ஏற்ற ரைட் சாய்ஸ் ராகி நூடுல்ஸ் !


செய்முறை:

முதலில் வெள்ளை அவலை தண்ணீரில் 2 அல்லது 3 முறை அலசி விட்டு, பின் அதனை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய்,புதினா ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின் கேரட்டை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அலசி வைத்துள்ள அவலை சாஃப்ட்டாக பிசைந்து அதில் ராகி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்தாக அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, துருவிய கேரட், சீரகம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.மாவினை கையில் கொஞ்சம் எடுத்து உருட்டி அதனை எண்ணெய் தடவிய வாழை இலையில் வைத்து, தட்டையாக தட்டி எடுத்து கொள்ள வேண்டும். 

அடுப்பில் 1 நாண்ஸ்டிக் தவா வைத்து சூடான பின் அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து, தட்டிய அடையை போட்டு, சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வேக வைத்து மறுபக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுத்தால் சத்தான ராகி முருங்கைக்கீரை அடை ரெடி!

click me!