ஊட்டச்சத்து நிறைந்த "கேழ்வரகு அடை" செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம் வாங்க!

By Dinesh TGFirst Published Nov 29, 2022, 5:26 PM IST
Highlights

ஊட்ட சத்து மிகுந்த கேழ்வரகை வைத்து ருசியான அடையை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சிறுதானிய வகைகளில் ஒன்றான கேழ்வரகு நமது ஆரோக்கியத்திற்கு பல விதங்களில் உதவி புரிகிறது. கேழ்வரகு சேர்த்து எந்த உணவை சாப்பிட்டாலும் அது நமக்கு நன்மையை மட்டுமே அளிக்கும். கேழ்வரகு வைத்து களி, புட்டு, சேமியா என்று பல வகையான ரெசிபிஸ் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் சத்தான கேழ்வரகு அடையை காண உள்ளோம்.

கேழ்வரகில் செய்யப்படும் உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் நன்கு சக்தி பெற்று பலம் அடையும். குறிப்பாக சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் இதனை எடுத்துக் கொள்வதால், உடலில் இருக்கின்ற சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும் இதில் கால்சியம் இருப்பதால், எலும்பு மற்றும் பற்களுக்கு மிகவும் நல்லது. 

ஊட்ட சத்து மிகுந்த கேழ்வரகை வைத்து ருசியான அடையை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு - 1 கப்
வெங்காயம் - 1 
பச்சை மிளகாய் - 2 
கறிவேப்பிலை-கையளவு 
முருங்கைக்கீரை - கையளவு 
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

காஞ்சிபுரம் ஸ்பெஷல் இட்லி எப்படி செய்வது ? பார்க்கலாம் வாங்க!

செய்முறை:

முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். முருங்கை கீரை மற்றும் கறிவேப்பிலையை சுத்தம் செய்து பொடியாக அரிந்து வைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, காய வைக்க வேண்டும். எண்ணெய் சூடான பின்,பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கைக்கீரை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். 

ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி, கேழ்வரகு மாவு மற்றும் உப்பு சேர்த்துக் கொண்டு, வதக்கிய கலவையை சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு தோசைக் கல் வைத்து, சிறிது எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். பிசைந்து வைத்துள்ள மாவினை கொஞ்சம் எடுத்து அடைப் போலத் தட்டி கொள்ள வேண்டும்.

 பின் அடையை சூடான தோசைக் கல்லில் போட்டு, சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி, ஒரு பக்கம் வேக வைத்துக் கொண்டு பின் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோதாங்க ருசியான கேழ்வரகு அடை ரெடி! இதற்கு தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

click me!