ப்ரக்கோலியை வைத்து சுவையான , ஆரோக்கியமான ப்ரக்கோலி கிரேவியை வீட்டில் எப்படி சுலபமாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் கொள்ளலாம்
வழக்கமாக சப்பாத்தி, நாண் போன்றவற்றிக்கு நாம் உருளைக்கிழங்கு, பட்டாணி, காலிஃபிளவர் அல்லது வெஜ் குருமா என்று தான் செய்து சாப்பிட்டு இருப்போம்.இதனையே மீண்டும் மீண்டும் செய்து அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக எதையாவது செய்து சாப்பிடணும் என்று நினைக்கிறீர்களா? அப்படியெனில் இந்த பதிவு உங்களுக்காக தான்.
காலிஃபிளவர் போன்று தோற்றத்தில் காணப்படும் ப்ரக்கோலியானது நிறத்தில் மாறுபட்டு ,பச்சையாக காணப்படும்.இந்த ப்ரக்கோலியில் எண்ணில் அடங்கா மருத்துவ நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த ப்ரக்கோலியை பல விதங்களில் சமைத்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று நாம் ப்ரக்கோலி கிரேவியை காண உள்ளோம்.
ப்ரக்கோலியில் காணப்படும் சல்போரபேன் என்ற வேதிப்பொருள் புற்று நோய்களின் செல்களின் வளர்ச்சியை முறித்து, அடிப்படை புற்று நோய் வராமல் தடுக்க பெரிதும் உதவுகிறது.மேலும் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்து ,சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.
இதில் அதிகளவில் பொட்டாசியம் இருப்பதால்,உயர் இரத்த அழுத்த பிரச்சனைகளை சரி செய்யும்.மேலும் இதில் பெருமளவில் பைபர் உள்ளதால், செரிமான பிரச்சனைகளையம் சரி செய்கிறது. இதில் விட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை பெற்றது.இன்னும் இதன் மருத்துவ குணங்களை அடுக்கி கொண்டே செல்லலாம்.
இத்தனை மருத்துவ நன்மைகளை தரும் ப்ரக்கோலியை வைத்து சுவையான , ஆரோக்கியமான ப்ரக்கோலி கிரேவியை வீட்டில் எப்படி சுலபமாக செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
ப்ரக்கோலி- 1/4 கிலோ
வெங்காயம் -1
தக்காளி விழுது-1/2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3/4 ஸ்பூன்
மல்லித் தூள்-1 ஸ்பூன்
மிளகாய்த் தூள்- 1 ஸ்பூன்
சீரகத் தூள்- 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
கரம் மசாலா தூள் -1/4 ஸ்பூன்
சீரகம் -1/2 ஸ்பூன்
ஏலக்காய் - 2
முந்திரி பருப்பு- 5
மல்லித்தழை- கையளவு
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
டீ டைம் ஸ்னாக்ஸ் உடன் ''அடை மாவு பக்கோடா'' செய்யலாமா ?
செய்முறை
முதலில் ப்ரக்கோலியின் தண்டினை மட்டும் நீக்கி விட்டு,பின் அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொண்டு,அதில் தண்ணீர் ஊற்றி,சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து 2 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
வெங்காயத்தை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும், தக்காளியை மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட் செய்துக்க கொள்ள வேண்டும். முந்திரி பருப்பினை மிக்சி ஜாரில் போட்டு சிறிது நீர் தெளித்து பேஸ்ட் செய்துக் கொண்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்,
அடுப்பில் ஒரு கடாய் வைத்து ,எண்ணெய் சேர்த்து ,எண்ணெய் காய்ந்த பின், ஏலக்காய் மற்றும் சீரகம் சேர்த்து தாளித்துக் கொண்டு,பின் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட வேண்டும்.பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.
இஞ்சி பூண்டின் வாசனை சென்ற பிறகு, அரைத்து வைத்த தக்காளி பேஸ்ட் சேர்த்து,அதன் பச்சை வாடை செல்லும் வரை வதக்கி விட்டு,அதில் மல்லித்தூள்,மிளகாய்த்தூள், சீரகத்தூள்,மஞ்சள் தூள்,கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கொஞ்சம் கிளறி விட்டு, மசாலாக்களின் கார வாசனை செல்லும்படி நன்றாக வதக்கி விட வேண்டும்.
இப்போது அரைத்த முந்திரி பேஸ்ட் சேர்த்து தண்ணீர் ஊற்றி, கொஞ்சம் மிக்ஸ் செய்து விட்டு, தட்டு போட்டு மூடி ,அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும்.இறுதியாக மல்லித்தழையை தூவி இறக்கினால் சுவையான ப்ரக்கோலி கிரேவி மசாலா ரெடி!