பொங்கல் விழாவில் வெண் பொங்கல், மிளகு பொங்கல், சர்க்கரை பொங்கல் ஆகியவை எல்லார் வீடுகளிலும் செய்யம் உணவு தான். சற்று வித்தியாசமான பாணியில் சத்தாகவும், சுவையாகவும் கொத்தமல்லிப் பொங்கலை சமைத்து பாருங்கள். அதனுடைய எளிய செய்முறையை இங்கு காணலாம்.
தேவையான பொருள்கள்
கால் கிலோ பச்சரிசி, 150 கிராம் பாசி பருப்பு, தேவையான அளவு எண்ணெய், ஒரு தேக்கரண்டி சீரகம், அதே அளவு மிளகு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், அதே மாதிரி அளவில் பெருங்காயம், ஒரு தேக்கரண்டி மிளகு, நான்கு கைப்பிடி அளவில் கொத்தமல்லித்தழை, இரண்டு காய்ந்த மிளகாய், தேவையான அளவு நெய், முந்திரி, உப்பு ஆகியவற்றை எடுத்து கொள்ளுங்கள்.
செய்முறை
பொங்கல் செய்வதற்கு அடி கனமான பாத்திரம் அவசியம். முதலில் பாத்திரத்தை எடுத்து அதில் 600 மில்லி தண்ணீர் ஊற்றி தூய்மைப்படுத்திய பச்சரிசி, பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காயம், மூன்று தேக்கரண்டி நெய் ஆகியவற்றை கலந்து கொண்டு தேவைப்படும் அளவிற்கு உப்பு சேர்த்து குழைவாக வேக வைக்க வேண்டும்.
அதே சமயத்தில் மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி தழை ஆகியவற்றை வதக்கி அவை சூடு ஆறி குளிர்ந்த பிறகு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
குழைவாக வேகவைத்த பொங்கலுடன் இப்போது அரைத்து எடுத்துக் கொண்டவற்றை சேர்த்து நன்கு கிளறவும். நெய்யில் வறுத்த முந்திரியை பொங்கலில் போட்டு கிளறவும். கண்ணை கவரும் பச்சை வண்ணத்தில் நீங்க எதிர்ப்பார்த்து காத்திருந்த கொத்தமல்லிப் பொங்கல் தயார். இதனை விருப்பச் சட்னி, சாம்பாருடன் பரிமாறி மகிழுங்கள்.