நமது உடலுக்கு விலங்குகளிடமிருந்து கிடைக்கும் புரதச்சத்து அவசியம் என்றாலும், அதனால் தீமைகள் ஏற்படுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நமது உடலின் ஆரோக்கியம் என்பது உடலின் அனைத்து பகுதிகளின் நலமும் சேர்ந்தது தான். எலும்புகள் நாம் இயங்கவும், நடமாடவும் பெருந்துணையாக உள்ளன. அவை ஆரோக்கியமாக இருக்க புரதம், கால்சியம் சத்து அவசியம். ஆனால் அதிகமான புரத உணவுகள் எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும், கால்சியம் இழப்புக்கு வழிவகுக்கும் என ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்திருப்பது அசைவ உணவு பிரியர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நம் உடலில் உள்ள எலும்பு ஆரோக்கியத்திற்கு புரதம் முக்கியமானது. ஆனாலும் அசைவ உணவுகளில் (விலங்கு புரதம்) குறிப்பாக சிவப்பு இறைச்சி அதிகம் எடுத்து கொள்வது எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புரதச்சத்து வேண்டும் என நினைப்பவர்கள் அதற்காக ரெட் மீட்டை (சிவப்பு இறைச்சி) மட்டும் நம்பாமல் பால், மீன், கோழி அதனுடன் தாவர அடிப்படையிலான புரதச் சத்துகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி தெரிவித்துள்ளார்.
வெறுமனே இறைச்சியுடன் மட்டும் நின்றுவிடாமல் புரதம் நிறைய உள்ள பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை உண்பதம் மூலம் புரதத் தேவையை சமநிலைப்படுத்தப்பட வேண்டும். நாம் உண்ணும் சிவப்பு இறைச்சியில் அதிக பாஸ்பரஸ்-கால்சியம் விகிதம் உள்ளது. விலங்குகளின் இறைச்சியை குறிப்பாக சிவப்பு நிற இறைச்சியை சாப்பிடும்போது இரத்தத்தை அமிலமாக்கும் நிகழ்வு நடப்பதாகவும், இதுவே எலும்புகளில் இருந்து கால்சியம் அகற்றப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் நிபுணர் அஞ்சலி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் கர்ப்பிணிகள் இந்த 6 உணவுகளை கண்டிப்பா சாப்பிடணும்... ஏன் தெரியுமா?
தாவர அடிப்படையிலான உணவுகளை அதிகமாக உண்ணுவதும், விலங்கு சார்ந்த உணவுகளை உட்கொள்வதைக் குறைப்பதும் இதய நோய், வகை 2 நீரிழிவு, மற்ற சில வகையான புற்றுநோய்கள் போன்ற நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனாலும் இதனால் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமான கால்சியம், வைட்டமின் டி குறைவாக கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
அசைவ உணவுகளை உண்ணும்போது கிடைக்கும் புரதமும், தாவர உணவுகளை உட்கொள்ளும்போது கிடைக்கும் புரதங்களில் உள்ள அமினோ அமிலங்களின் கலவையும் வெவ்வேறானது. அதனால் அசைவ உணவுக்கு சைவ உணவு மாற்று உணவாக இருக்காது. இருந்தாலும், அதிகமாக சிவப்பு இறைச்சி உண்ணும்போது நீரிழிவு, இதய நோய், சில புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் மிதமாக எடுத்து கொள்வது நல்லது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும். உங்கள் உணவில் ஏதேனும் பெரிய மாற்றங்களைச் செய்வதற்கு முன் ஒரு ஊட்டச்சத்து நிபுணரை/ மருத்துவரை அணுகுவது நல்லது.
இதையும் படிங்க: இதழ் முத்தத்தில் இப்படி ஒரு ஆபத்தா? இனி ரொமாண்ஸ் பண்ணுறப்ப கவனம்...