Kumbakonam Kadappa Recipe : இந்த கட்டுரையில் கும்பகோணம் கடப்பா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
தினமும் உங்கள் வீட்டில் இட்லி, தோசை, சப்பாத்திக்கு சட்னி சாம்பார் குருமா வைத்து போரடித்து விட்டதா? மேலும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சற்று வித்தியாசமாகவும், சாப்பிடுவதற்கு சுவையாகவும் ஏதாவது ஒரு ரெசிபி செய்து கொடுக்க விரும்பினால் உங்களுக்கான பதிவு தான் இது.
கும்பகோணம் என்றாலே நம் அனைவரது நினைவுக்கு முதலில் வருவது டிகிரி காபி தான். இதற்கு அடுத்தபடியாக அங்கு மிகவும் பிரபலம் எதுவென்றால், கும்பகோணம் கடப்பா தான். இந்த கும்பகோணம் கடப்பா ரெசிபி செய்வது மிகவும் ஈஸி. மேலும் இந்த ரெசிபியை இட்லி, தோசை, சப்பாத்திக்கு வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும். ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த கும்பகோணம் கடப்பா செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் கும்பகோணம் கடப்பா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
undefined
இதையும் படிங்க: காலையில் ஒருமுறை இப்படி முட்டையை வைத்து டேஸ்டான டிபன் செய்ங்க.. ரொம்பவே சத்தானது..
கும்பகோணம் கடப்பா செய்ய தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு - 1 கப்
தேங்காய் - 1/4 கப் (துருவியது)
உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4
பொட்டுக் கடலை - 1/4 ஸ்பூன்
கசகசா - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
சோம்பு - 2 ஸ்பூன்
பட்டை - 2
இலவங்கம் - 2
பிரியாணி இலை - 1
பெரிய வெங்காயம் - 1(பொடியாக நறுக்கியது
தக்காளி - 1(பொடியாக நறுக்கியது
எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: காலை டிபனுக்கு சத்தான வெஜிடபிள் இட்லி.. இப்படி செஞ்சு அசத்துங்க!
செய்முறை:
கும்பகோணம் கடப்பா செய்ய முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவவும். பின் அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் பாசி பயிறு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் தூள், நறுக்கிய உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து குக்கரில் நான்கு விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும். குக்கரில் விசில் போன பிறகு மூடியை திறந்து பாசிப்பருப்பை நன்கு மசிக்கவும்.
இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் சிறிதளவு சோம்பு, கசகசா, பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இதனை அடுத்து அடுப்பில் ஒரு வானலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, இலவங்கம், சோம்பு, பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின் அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அதில் பொடியாக நறுக்கி வைத்த தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கி பிறகு அதில் வேகவைத்து எடுத்த பருப்பு சேர்க்கவும். இதனுடன் அரைத்து வைத்த மசாலா மற்றும் சிறிதளவு உப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் அவற்றை சுமார் ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலை சேர்க்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் கும்பகோணம் கடப்பா தயார்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை உங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D