
உயர் கொலஸ்டிரால் இருக்கும் நபர்களுக்கு கார்ர்டியோ வாஸ்குலர் நோய்கள் அதாவது இதயம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்புகள் அதிகமுள்ளது. இதைத் தடுக்க கொலஸ்டிரால் அளவை குறைத்தாக வேண்டும். ஏனென்றால் கெட்ட கொழுப்புகள் ரத்தக் குழாய்களில் படிவதால் இரத்த ஓட்டம் தடைபட வாய்ப்புள்ளது. இது இரத்தக் குழாய் அடைப்பை கூட ஏற்படுத்த வாய்ப்புள்ளது. உயர் கொலஸ்டிரால் இருந்தால் மாரடைப்பு, உடல் பருமன் ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதை கட்டுக்குள் வைக்க உணவுப் பழக்கத்திலும் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் பதிவில் எளிமையான கொலஸ்டிராலை குறைக்கும் உணவுகளை காணலாம்.
ஓட்ஸ் பேன் கேக்
நார்ச்சத்துக்கள் மிகுந்தது ஓட்ஸ். இதனை மிக்சியில் பொடி செய்து, அதனுடன் பொடியாக நறுக்கிய கேரட் கீரை, கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். இதை நன்கு கலக்கிய பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் எண்ணெய், உப்பு ஆகியவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பேன் கேக் மாவு பதத்தில் கரைத்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை பத்து நிமிடங்கள் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தோசை கல்லில் மாவு ஊற்றி நன்கு வேக விட்டு எடுத்தால் சுவையான ஓட்ஸ் பேன் கேக் ரெடி.
மரகோதுமை தோசை
தினமும் வெறும் அரிசியில் தயாரிக்கும் தோசை, இட்லியை சாப்பிடுவதற்கு பதிலாக கோதுமையை உளுந்துடன் சேர்த்து இந்த தோசையை செய்து பாருங்கள். சுவை அட்டகாசமாக இருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவும். இதற்கு முதலில் கருப்பு உளுந்து, மரகோதுமை ஆகிய இரண்டையும் மையாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த மாவுடன் சிறிதளவு அரிசி மாவு, நறுக்கிய பச்சை மிளகாய் இஞ்சி உப்பு ஆகியவையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். கொஞ்சம் எண்ணெயில் கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்து அதனையும் சேர்த்துவிடுங்கள். இந்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் விட்டு தோசை பதத்துக்கு மாவை கலக்கி பத்து நிமிடங்கள் அப்படியேவிடுங்கள். பின் தோசை வார்த்து சாப்பிட்டால் சுவை அடடே! அப்படியிருக்கும்.
புரோட்டீன் அடை தோசை
இந்த தோசை சுடுவதற்கு முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவி அதனை சுத்தமான தண்ணீர் சேர்த்து இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊற வையுங்கள். நன்கு ஊறிய பருப்பில் தண்ணீரை வடிகட்டிவிட்டு அதனுடன் தேவையான அளவு பச்சை மிளகாய், ஒரு இன்ச் இஞ்சி, சிறிதளவு சீரகம் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையுடன் பெருங்காயம், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி இலைகள், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு கலக்கி கொள்ளுங்கள். உங்களுடைய மாவு கெட்டியாக இருந்தால் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கொண்டு வாருங்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை தோசை மீது தூவலாம். தோசைக்கல் சூடான பின் மாவை அடை போல ஊற்றி சிறிதளவு எண்ணெய் தோசை மீது விட்டு வேக வைத்து எடுங்கள். மாவு திக்காக இருக்கும் காரணத்தால் நன்றாக வேக நேரம் எடுக்கும். மிதமான தீயில் இருபுறமும் திருப்பிப் போட்டு எடுங்கள். சுவையான புரோட்டீன் அடை அல்லது பாசிப்பயறு அடை தயார்.
இந்த உணவுகளை தினமும் காலை எடுத்துக் கொள்வது உங்களுடைய கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. ஒரு நாள் மரகோதுமை தோசை, மறுநாள் ஓட்ஸ் பேன் கேக், இன்னொரு நாள் அடை தோசை என மாறி மாறி சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற முடியும். இதனால் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.