சீலா, இறால், நெய்தோலி, சுறா கருவாடு மருத்துவ பலன்கள் ஏராளம்! யாரெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா?

By Pani Monisha  |  First Published Jan 3, 2023, 6:37 PM IST

Amazing benefits of dried fish : கருவாடு பலரது விருப்ப உணவாக இருந்தாலும், அதை எடுத்து கொள்வதால் நம் உடலில் ஏற்படும் நன்மைகளை பெரிய பட்டியலே போடலாம். அதே சமயம் சில பக்க விளைவுகளையும் இது உண்டாக்குகிறது.


சிங்காரவேலன் படத்தில் கமல் தன் ஊரிலிருந்து வரும்போது கருவாடு கொண்டு வருவார். அந்தக் காட்சியில் ஆட்டோ ஓட்டுநர் அதனை துர்நாற்றம் என்று சொல்ல கமலின் நண்பர்களோ அதனை வாசனை என்பர். கருவாடின் வாசனையின்றி வெகுநாள்களாக நகரவாழ்க்கைக்கு பழகிவிட்ட கமலின் நண்பர்களுக்கு அது வாசனையாகத்தான் தெரியும். கருவாடு பிடிக்காது என்பவர்கள் அதனை ரசித்து ருசிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வெறுமனே சுவைக்காக மட்டுமின்றி அதன் மருத்துவ பயன்களுக்கும் பெயர் போனது கருவாடு. 

உலர வைத்த மீனைத்தான் கருவாடு என்கிறோம். ஆனால் உப்பில் உலர்ந்த கருவாடு மீனைவிட ருசி மிகுந்தது. ஒரே ஒரு கருவாடை கொஞ்சம் மிளகாய் தூள் சேர்த்து பொரித்து கொடுத்தால் ஒரு தட்டு பழைய சோற்றை உண்டு விடலாம். ஒரு செம்பு கூழ் குடித்து முடிக்கலாம். அத்தனை ருசி கருவாட்டில் உள்ளது. எவ்வளவு ருசியாக இருந்தாலும் நமது உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் என்றால் அதனை தவிர்க்கத்தான் வேண்டும். இதயம், சிறுநீரகம், தோல் நோய்கள் கொண்டவர்கள் கருவாட்டை பார்ப்பதோடு நிறுத்தி கொள்ள வேண்டும். உடலுக்குள் அனுப்பி சிக்கலை ஏற்படுத்தக் கூடாது. அசிடிட்டி, செரிமான கோளாறு உள்ளவர்களும் இதை தவிர்த்துதான் ஆக வேண்டும். 

Tap to resize

Latest Videos

எந்தெந்த கருவாடு அதிக நன்மை பயக்கும்?

ருசிக்காக நிறைய கருவாடுகளை நாம் எடுத்து கொள்ளலாம். ஆனால் உடலில் நல்ல மாற்றங்களுக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் கருவாடை தேர்வு செய்பவர்கள்  வரால், குறவை, திருக்கை, தேளி, அயிரை, சன்னை, சுறா, மசரை, கிழங்கான், நெய்தோலி போன்றவற்றை உண்ணலாம். பத்திய காலத்தில் கூட இவற்றை எடுத்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் மருத்துவரை கேட்டு கொள்வது நல்லது. எப்போதும் நாம் உண்ணக் கூடாத கருவாடுகள் பட்டியலில் வாளை, இறால், விலாங்கு, பருங்கெண்டை, சேற்கெண்டை, சன்னக்கூனி உள்ளதாக சித்தமருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன. மீனை விட அதன் கருவாடுகளில் தான் அதிக ஆற்றலும், சத்துக்களும் கிடைக்கிறன.

பயன்களும் பாதிப்புகளும்!

கொடுவா மீனை விடவும் அதன் கருவாடுதான் அதிக சத்துக்களை கொண்டுள்ளதாம். இதனை உண்ணும்போது உடல் பலவீனம் நீங்கி வலிமையாக உணர்வீர்கள். ரத்த சோகை, நோய் எதிர்ப்பு சக்தி குறை ஆகியவற்றிற்கு இந்த கருவாடு ஏற்றது. கொடுவா கருவாடை போலவே பலன் தரக்கூடியதுதான் உப்பங்கெளுத்திக் கருவாடும். இதையும் சமையலில் சேர்த்து கொள்ளலாம். 

இதையும் படிங்க; பில்லி சூனியத்தால் கவலையா? கருங்காலி மரத்தை பத்தி தெரிஞ்சுக்கோங்க!


நன்னீர் நிலைகளில் வாழும் சன்னக்கெண்டை மீனை உலர வைத்தால் நமக்கு கச்சற்கருவாடு கிடைக்கும். இது சந்தைகளில் போலியாக விற்கப்படும் அபாயம் உள்ளது. அதனால் நம்பகமான கடைகளில் வாங்குகள். வாயு பிரச்சனை, சளி தொல்லை, தோல் அரிப்பு, பசியின்மை ஆகிய நோய்களுக்கு இது ஏற்றது. செரிமான சக்தியை தூண்டும். ஆனால் இது பித்தத்தை அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் இதை உண்டு சில மணி  நேரங்களில் சுக்கு காபி எடுத்து கொள்ளுங்கள்.  
சீலா கருவாடை பொருத்தவரை பலரது விருப்பப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் கருவாடு இது. கொடுவா, உப்பங்கெளுத்திக் கருவாடு ஆகியவற்றின் மருத்துவபலன்களையே இதுவும் கொண்டுள்ளது. எடையை அதிகரிக்க விரும்புவோர் இந்தக் கருவாடை அதிகம் எடுத்து கொள்ளலாம், எடையை குறைக்க விரும்புவோர் சீலா மீனை எடுத்து கொள்ளலாம். 100 கி சீலா மீனில் 90 கலாரிகள் தான் இருக்கின்றன.

கலவிக்கு சிறந்த கருவாடு!

  • இறால் கருவாடு உடலுக்கு நல்ல வலிமையை அதிகரிக்கிறது. கலவியில் அதிக நாட்டம் ஏற்பட விரும்புவோருக்கு இந்த கருவாடு நல்ல தேர்வு. வயிறு உப்புசம், மூட்டு வலி, பசியின்மை, வாயு பிடிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகளையும் சரி செய்யும்.
  • கோலா மீனின் கருவாட்டை கொள்ளிக்கருவாடு என்றும் அழைப்பர். இது சளியை நீக்கினாலும் சருமத்தில் அரிப்பு உள்ளிட்ட சில பக்க விளைவுகளை உண்டாக்கும். பிற கருவாட்டை போல அடிக்கடி எடுத்து கொள்ளாதீர்கள்.
  • கிழங்கான் கருவாட்டை உண்பதால், செரிமான சக்தியை அதிகரிக்கலாம். நச்சுக்களை வெளியேற்றி உடலை மேம்படுத்தும்.
  • கக்குவான் இருமல் குணமாக வேண்டும் எனில் கொக்குமீன் கருவாடு எடுத்து கொள்ளலாம்.
  • அடிக்கடி மயங்கி விழுபவர்களுக்கு ஏற்றது மசரை என்னும் மயறி கருவாடு. கபம், வாதம் பித்தம் ஆகியவை அதிகமாக காணப்படுவதால் உண்டாகும் நோய்களை குறைப்பதில் இது உதவுகிறது.  இதைப் போலவே ஓலைவாளைக் கருவாடு பித்த, வாத நோய்களுக்கு நல்ல பலன் தரக்கூடியது.
  • உடலுக்கு வலிமை கொடுப்பது வரால் கருவாடு. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், செரிமான கோளாறுகளை குணப்படுத்தும்.

பிரசவித்த பெண்களுக்கு ஏற்ற கருவாடு!

பேதி, வயிற்று வலி போன்ற சிலவற்றை சரி செய்யும் வல்லமை கொண்ட சுறா கருவாடு பசியையும் அதிகரிக்கும். கபம், வாதம் பறந்து போகும். குடலில் உள்ள கிருமிகளை நீக்கும். பால் சுறா கருவாடுதான் பிரசவித்த பெண்களுக்கு ஏற்றது. தாய்ப்பால் சுரக்கவும், மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்யவும் உதவும்.இதைப் போலவே குறவை கருவாடும், கறுப்பு வௌவால் மீனின் கருவாடும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் வல்லமை உடையது. கூடுதலாக கறுப்பு வௌவால் மீன் கருவாடு விந்து சுரப்பிற்கும் உதவுகிறது. ஆனாலும் அளவாக எடுத்து கொள்வது நல்லது. 

இதையும் படிங்க; மாத்திரை வேண்டாம்! மாதவிடாய் சீக்கிரம் வர இதை சாப்பிடுங்க போதும்!

பாதிப்பை உண்டாக்கும் கருவாடு
உல்லமீன் கருவாடு அடிக்கடி எடுத்து கொண்டால் சிரங்கு, பேசி, தோல் வியாதிகள் உண்டாகும். கெண்டைக் கருவாடு வயிற்று நோய்களையும்,சர்க்கரை வியாதியையும், தோல் வியாதியை உண்டாக்கக் கூடியது. கறுப்பு வௌவால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பிரிவை சேர்ந்தது. இதனால் சொரி சிரங்கு, கரப்பான், நீரிழிவு நோய்களை உண்டாக்கும்.

கடல் ஆரால் மீன் கருவாடை விட ஆற்று ஆரால் மீன் கருவாடு ஆபத்தானது. இது உடல் வலிகளை போக்கினாலும், கப நோய்களையும், பசிமந்தம் கரப்பான் நோய்களையும் ஏற்படுத்தும் அபாயம் உடையது. காசநோயைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தாலும் குறவை கருவாடை அதிகம் உண்டால் மலச்சிக்கல் உண்டாகும். ஒரு நோயை குணமாக்க நினைத்து பல நோய்களை வாங்கிய கதையாகிவிடக் கூடாது. ஆகையால் கருவாடு உண்ணும்போது கவனமாக இருங்கள். 

இதையும் படிங்க; தொட்டு பாத்தா பன்னு மாதிரி கன்னம்! வீட்டிலே செய்யலாம் அழகை கூட்டும் புரூட் பேசியல்

click me!