
கோடை வெயிலால் சருமத்தின் நிறம் கருமையாகி, அழகையே பாழாக்கிவிடும். உங்களது சருமத்தின் நிறமும் வெயிலால் கருப்பாக மாறிவிட்டதா?ஆனால், இப்படி வெயிலால் கருத்துப்போன சருமத்தை பொலிவாக மாற்ற தற்போது ஏராளமான அழகு பராமரிப்பு பொருட்கள் கடைகளில் விற்பனையாகின்றன. இருப்பினும் அவற்றில் இரசாயனங்கள் கலந்திருப்பதால், அது ஒரு சிலருக்கு சருமத்தில் அழற்சியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், சில சரும பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.
எனவே, வெயிலால் சருமத்தில் ஏற்பட்ட கருமையைப் போக்க இரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, நம் வீட்டில் அதுவும் குறிப்பாக கிச்சனில் இருக்கும் ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு செய்தால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, பொலிவாக மாறும். மேலும் சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.
பொதுவாகவே, சருமத்தின் நிறத்தில் மாற்றம் வருகிறது என்றால், சருமத்தில் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் அதிகம் தேங்கியிருக்கிறது என்று அர்த்தம். இத்தகைய சூழ்நிலையில், சருமத்தை ஆழமாக சுத்தம் செய்யவும், அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்க வேண்டுமெனில், ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
இதற்கு நம்முடைய வீட்டு கிச்சனில் இருக்கும் காபித் தூள் கொண்டு ஸ்க்ரப் தயாரித்து அதை பயன்படுத்தி வந்தால், வெயிலால் நிறமாற்றமடைந்த சருமத்தை பொலிவாக்கலாம் மற்றும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம். சரி, இப்போது கோடை வெயிலால் கருமையான சருமத்தின் நிறத்தை பொலிவாக மாற்ற காபித் தூள் கொண்டு ஸ்க்ரப் எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஸ்க்ரப் தயாரிக்க தேவையான பொருட்கள்:
காபித் தூள் - 1 ஸ்பூன்
சர்க்கரை - 1 ஸ்பூன்
தேன் - 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
காய்ச்சாத பால் அல்லது ரோஸ் வாட்டர் - 1 ஸ்பூன்
ஸ்க்ரப் பயன்படுத்தும் முறை:
இந்த ஸ்க்ரப் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்த காபித் தூள், சர்க்கரை, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் காய்ச்சாத பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதில் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலக்க வேண்டும்.
இப்போது தயாரித்து வைத்த இந்த பேஸ்டை உங்களது முகம் மற்றும் கழுத்தில் தடவி மென்மையாக ஸ்க்ரப் செய்யுங்கள். அதுவும் சுமார் 4-5 நிமிடங்கள் ஸ்க்ரப் செய்ய வேண்டும். அதன் பிறகு 10 நிமிடம் அப்படியே வைத்துவிடுங்கள். அடுத்ததாக, சூடான நீரில் முகம் கழுத்தை கழுவி, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். இறுதியாக மாய்ஸ்சரைசர் அல்லது சீரம் தடவ வேண்டும்.
இந்த ஸ்க்ரப்பை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த வேண்டும். அதுவும் இரவு தூங்கும் முன் தான் பயன்படுத்த வேண்டும். இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி, முகம் பொலிவாக மாறும் மற்றும் சருமத்தின் நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.