
இந்த நவீன காலத்துல மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தால் பல்வேறு உடல் நில பிரச்சனைகளை நாம் சந்திக்கிறோம். இதில் தலைமுடி தொடர்பான பிரச்சனைகளும் அடங்கும். முடி உதிர்தல், உடைதல், வறட்சி, நுனி முடி பிளவு உள்ளிட்ட பல கூந்தல் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். கடைகளில் விற்பனையாகும் பொருட்களை வாங்கி பயன்படுத்தினால் முடி தொடர்பான பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கும் எனவே இதை தவிர்க்க சில வீட்டு வைத்திய முறைகள் பின்பற்றுவது நல்லது.
இதற்கு நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை உங்களுக்கு உதவும். இவை இரண்டிலும் தலை முடிக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அவை உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியின் வேர் முதல் நுனிவரை வலுப்படுத்தும். சரி இப்போது இந்த பதிவில் தலைமுடி ஆரோக்கியத்திற்கு கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காய் நன்மைகள் மற்றும் அதை எப்படி சாப்பிட வேண்டும் என்று காணலாம்.
தலைமுடிக்கு கறிவேப்பிலையின் நன்மைகள் :
- கறிவேப்பிலையில் அத்தியாவாசிய புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளதால் அவை கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.
- கறிவேப்பிலையில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள், பூஞ்சை காளான் கலவைகள் தலைமுடியில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் மற்றும் குவிவதை தடுக்கும். மேலும் உச்சந்தலையை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
- கறிவேப்பிலையில் நிறைந்திருக்கும் அமினோ அமிலங்கள், பீட்டா கரோட்டின் உதிர்தலை தடுத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
- கறிவேப்பிலை தலைமுடியின் மெலனினை மீட்டெடுக்க உதவும். மேலும் இது முடி முன்கூட்டியே நரைப்பதை மெதுவாக்கும். அதுமட்டுமின்றி அடர்த்தியான, பளபளப்பான கூந்தலை வழங்கும்.
தலைமுடிக்கு நெல்லிக்காயின் நன்மைகள் :
- நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளன. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து முடியை வலிமையாக்கும்.
- நெல்லிக்காயில் குளிர்ச்சியான மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் அவை உச்சந்தலையில் ஏற்படும் பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.
- நெல்லிக்காயில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளதால் அவை முடி செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும். எனவே இதை தினமும் சாப்பிடுவதன் மூலம் வலுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.
- நெல்லிக்காயில் இருக்கும் இரும்புச்சத்து கூந்தலின் நுண்ணுரைகளை சுற்றி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். இதனால் உச்சந்தலையில் அதிக ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அடைந்து ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும்.
எப்படி சாப்பிடனும்?
1. மூலிகை பானம் :
ஒரு கிளாஸ் தண்ணீரில் நறுக்கிய நெல்லிக்காய், கறிவேப்பிலை சிறிதளவு இஞ்சி, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து தினமும் காலை மற்றும் இரவு தூங்கும்போது குடித்து வந்தால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். செரிமானத்திற்கும் நல்லது.
2. ஜூஸ் :
இந்த ஜூஸ் தயாரிக்க ஒரு நெல்லிக்காய், 10 முதல் 12 கறிவேப்பிலை, சின்ன துண்டு இஞ்சி, சீரகம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து சாறாக எடுத்துக் கொள்ளுங்கள். இது நச்சு நீக்கும் பானம் என்பதால் இதை தினமும் காலையில் குடித்து வந்தால் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும்.
3. கருவேப்பிலை சாதம் :
கறிவேப்பிலையை சாதமாக தயார் செய்து சாப்பிடலாம். மேலும் வழக்கமான உணவுகளுடன் சேர்ப்பதன் மூலம் நீளமான மற்றும் வலுவான கூந்தலை பெறுவீர்கள்.
4. ஸ்மூத்தி
கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காயை மற்ற பழங்கள் விதைகளுடன் சேர்த்து ஸ்மூதியாக குடிக்கலாம். இது வலுவான முடியை தர உதவும்.
மேலே சொன்ன படி, கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காயை ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கு எடுத்துக் கொள்ளலாம் ஆனாலும் உங்களுக்கு ஏதேனும் உடனல்ல பிரச்சனைகள் இருந்தாலோ அல்லது மருந்துகள் எடுத்துக் கொண்டாலோ மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசிப்பது நல்லது.