நமது அன்றாட வாழ்வில் குளியல் முக்கியமானது. உடல் உஷ்ணத்தை நீக்கவும், புத்துணர்ச்சி அளிக்கவும் குளியல் உதவுகிறது. ஆனால், சரியான குளியல் முறை பல நோய்களுக்கு தீர்வாக அமையும்.
நமது அனைவரின் அன்றாட வாழ்க்கை முறையில் குளியல் என்பது முக்கியமான ஒன்று. குளியல் என்பதன் பொருள் உடலை குளிர்வித்தல் என்பதாகும். நமது உடலில் உள்ள உஷ்ணத்தை நீக்க குளியல் என்பது அவசியமான ஒன்று. தினமும் காலையில் குளித்தல் என்பது மிகவும் புத்துணர்ச்சியான அனுபவம்.ஆனால் இன்றைய இயந்திர உலகில் குளியல் என்பது உடலில் உள்ள அழுக்குகளை மட்டும் நீக்கத்தான் என்பது போன்று தான் அனைவரின் குளியல் முறையும் காணப்படுகிறது.
கிராமபுறங்களில் உள்ள குளியல் முறைக்கும், நகர வாழ்வில் உள்ள குளியல் முறைக்கும் இடையிலேயே பல வேறுபாடுகள் காணப்படுகிறது. கிராமப்புறங்களில் மக்கள் ஆறுகள், குளம், குட்டைகள் போன்றவற்றில் குளிக்கின்றனர். ஆனால் நகரவாசிகள் அனைவரும் குளியலறை குளியலை மட்டுமே மேற்கொள்கின்றனர்.
குளிப்பதால் உஷ்ணம் தணியுமா?
குளம், குட்டைகளில் குளிக்கும்போது உடலில் உள்ள உஷ்ணம் தணிகிறது. குளியலறையில் குளிக்கும் போது பெரும்பாலானோர் முதலில் தலையில் தண்ணீர் ஊற்றியே குளிக்கத் தொடங்குகின்றனர். இது உடலில் உள்ள உஷ்ணத்தை வெளியேற விடமால் உடலிலேயே தங்க நேரிடுகிறது. இது பல பிரச்னைகளுக்கு வழி வகுக்குகிறது.
உச்சந்தலையில் தண்ணீர் ஊற்றலாமா?
குளிக்க தொடங்கும் போது முதலில் உச்சந்தலையில் முதலில் தண்ணீர் ஊற்றக்கூடாது.நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தான் தலை பகுதியில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேலெழும்பி கண், காது வழியாக வெளியேறும்.
எதற்காக தலையில் பெரியவர்கள் தண்ணீர் தெளிக்கிறார்கள்?
நம் முன்னோர்கள் குளங்களில் குளிக்க இறங்கும்போது ஒரு செயலை செய்வார்கள். பெரும்பாலானவர்கள் அதை கவனித்திருக்க மாட்டோம். குளத்தில் இறங்கும் போதே சிறிது தண்ணீரை தலையில் தீர்த்தம் போல தெளித்து கொண்டே இறங்குவார்கள். அவ்வாறு ஏன் தலையில் தண்ணீர் தெளிக்கிறார்கள் என்றால் உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது என்பதற்காக தான். தலை எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.
உடலில் உஷ்ணம் குறைக்க என்ன செய்யலாம்?
வாரத்தில் ஒருமுறையாவது கண்டிப்பாக உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளிப்பது உடலுக்கு நல்லது. அதிலும் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலில் உள்ள உஷ்ணம் குறையும். உடலில் உஷ்ணத்தால் கண்கட்டி, வாய்ப்புண் போன்றவை சிலருக்கு அடிக்கடி ஏற்படும். குளியல் என்பது அன்றாட கடமைகளில் ஒன்றாக இல்லாமல், சரியாக குளித்து வந்தால் பல நோய்களுக்கு அதுவே தீர்வாக அமையும். உடலில் உஷ்ணம் சேர்வதால் இன்று உடலுக்கு நிறைய தீங்குகள் நேர்கிறது. இதற்கு தீர்வாக குளியல் முறையே அமையும். ஆனால் நம்மில் பலரும் மேல்நாட்டு கலாச்சார முறையில் குளியல் அறைக்கு சென்றவுடன் ஷவரை திறந்துவிட்டு நேராக தண்ணீர் தலையில் விழும்படி தான் குளிக்கிறோம். இனியாவது நமது குளியல் முறையை மாற்றி ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.