'பிசுபிசுக்கும்’ மோடி அரசின் ஜி.எஸ்.டி. அறிமுக நிகழ்ச்சி - காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் புறக்கணிக்க முடிவு

First Published Jun 29, 2017, 3:55 PM IST
Highlights
Congress objects to PM Narendra Modi launching GST in President Pranab Mukherjees presence


சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) நடைமுறைக்கு வரும் ஜூலை 1-ந்தேதியையொட்டி, நாடாளுமன்றத்தில் நாளை நள்ளிரவில் மத்திய அரசு சார்பில் நடக்கும் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்று  காங்கிரஸ் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவித்துள்ளன. 

எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றாக விழாவை புறக்கணித்து வருவதால், மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு மிகப்பெரிய தர்மசங்கடமான சூழல் நிலவியுள்ளது. இதனால், பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சி பிசுபிசுக்கப்போகிறது. 

நள்ளிரவு நிகழ்ச்சி

ஜூலை 1-ந் தேதி நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வர உள்ளது. இதற்கான அனைத்து பணிகளையும் மத்திய அரச முடித்து, தயாராகி வருகிறது. ஜி.எஸ்.டி.

நடைமுறைக்கு வருவதையொட்டி, நாளை இரவு நாடாளுமன்றத்தில் நள்ளிரவுக்கு மேல் சிறப்பு நிகழ்ச்சி நடத்த மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து கட்சித் தலைவர்களுக்கும், அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவே கவுடா ஆகியோருக்கும் மத்தியஅரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

மம்தா மறுப்பு

ஆனால் இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி பங்கேற்குமா என்பது  எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணிக் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி ஜி.எஸ்.டி. அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம் என நேற்று அறிவித்தார்.

காங்கிரஸ் புறக்கணிப்பு

இந்நிலையில், ஜி.எஸ்.டி. அறிமுகக்கூட்டத்தில் பங்கேற்காலாமா? என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தின் முடிவில், மத்திய அரசு இன்று நடத்தும் ஜி.எஸ்.டி. அறிமுக விழாவில் பங்கேற்கப்போவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சத்யவர்த் சதுர்வேதி கூறுகையில், “ மத்தியஅரசு சார்பில் நடக்கும் ஜி.எஸ்.டி. அறிமுகக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது’’ எனத்தெரிவித்தார்.

இ. கம்யூனிஸ்ட் முடிவு

இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணியான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் ஜி.எஸ்.டி அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்  சுரவ்ராம் சுதாகர்ரெட்டி கூறுகையில், “ எம்.பி.க்களுடன் நாங்கள் நடத்தியஆலோசனைக்குப் பின், மத்தியஅரசு நடத்தும் ஜி.எஸ்.டி.

அறிமுக நிகழ்ச்சியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். ஜி.எஸ்.டி.க்கு மக்களை தயாராகவிடாமல், போதுமான நேரம் கொடுக்காமல், மத்திய அரசு மிகவும் அவசரப்படுகிறது.

ஏற்கனவே இருக்கும் வரி முறைகளைக் காட்டிலும் ஜி.எஸ்.டி.யில் வரிவீதம் அதிகமாக இருக்கிறது.

நாட்டில் உள்ள சில தொழிற்சாலைகளின் குறைகளையும், கருத்துக்களையும் கேட்க மத்தியஅரசு தயாராக இல்லை.

வங்கி பரிவர்த்தனையும், கிரெடிட், டெபிகார்டு பரிவர்த்தனைக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது இதை கருத்தில் கொண்டு நாங்கள் புறக்கணிக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.

click me!