கால்வான் மோதலுக்குப் பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி சீனாவுக்குச் செல்கிறார். SCO மாநாட்டில் ஜின்பிங் மற்றும் புதினையும் சந்திக்கவுள்ளார். LAC பகுதியில் ஏற்பட்ட உடன்படிக்கைகளுக்குப் பிறகு இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.
2020ஆம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவுக்குச் செல்கிறார். இம்மாத இறுதியில் இந்தப் பயணம் நடைபெறவுள்ளது. இந்தியா-சீனா உறவுகளில் பதற்றமான சூழல் நிலவுவதால், இந்தப் பயணம் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
24
பிரதமரின் சீனப் பயணம்
பிரதமர் மோடி ஆகஸ்ட் 30 அன்று ஜப்பானுக்குச் சென்று, பின்னர் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் நடைபெறும் SCO மாநாட்டில் பங்கேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாநாட்டின் போது, பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பு, LAC (உண்மையான கட்டுப்பாட்டுக்கோடு) பகுதியில் ரோந்து ஏற்பாடுகள் குறித்து இந்தியா மற்றும் சீனா இடையே ஏற்பட்ட உடன்படிக்கைகளுக்குப் பிறகு நடைபெறுகிறது.
34
பாதுகாப்பு அமைச்சரின் சீன பயணம்
சமீபத்தில், ஜூன் 2025-இல், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது, இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாத சில வாசகங்கள் அடங்கிய வரைவு அறிக்கை குறித்து அவர் அதிருப்தி தெரிவித்ததால், மாநாட்டின் முடிவில் எந்தவித கூட்டு அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
பாகிஸ்தான் மற்றும் சீனாவால் முன்மொழியப்பட்ட அந்த வரைவில், பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் குறைத்து மதிப்பிடப்பட்டதாகவும், 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து குறிப்பிடப்படவில்லை என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரிக்ஸ் (BRICS) நாடுகள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதாகவும், அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் விமர்சித்திருந்த நிலையில், இந்த SCO மாநாடு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.