Siragadikka Aasai Actor Jayamani No More : சிறகடிக்க ஆசை சீரியலில் மலேசியா மாமா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் ஜெயமணி திடீரென மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 79.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' தொடரில் "மலேசியா மாமா" என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட நடிகர் ஜெயமணி காலமானார் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 79 வயதான அவர் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நடிகர் ஜெயமணி, சின்னத்திரை உலகில் நீண்ட காலமாக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது 'திருமதி செல்வம்' தொடர்.
அதன்பிறகு பல சீரியல்களில் தோன்றிய அவர், சில ஆண்டுகளாக நடிப்பில் இருந்து விலகி இருந்தார். அதன்பின்னர், 'சிறகடிக்க ஆசை' தொடரின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். இதில் ரோகிணியின் உறவினராகவும், கறிக்கடை நடத்தும் "மலேசியா மாமா" என்ற கதாபாத்திரத்திலும் நடித்த அவர், தனது இயல்பான நடிப்பால் குறுகிய காலத்திலேயே பார்வையாளர்களின் மனதில் இடம்பிடித்தார். தொடக்கத்தில் சில காட்சிகளுக்காக மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கதாபாத்திரம், ரசிகர்களின் வரவேற்பு காரணமாக தொடரில் முக்கியத்துவம் பெற்றது.
குறிப்பாக, ரோகிணியின் ரகசியங்களை குடும்பத்தினர் முன் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. "மலேசியா மாமா" எப்போது முத்துவிடம் சிக்குவார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் எபிசோடுகளை ஆவலுடன் பார்த்து வந்தனர். அவரது எளிமையான நடிப்பும், இயல்பான வசன உச்சரிப்பும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், தொடரில் மேலும் அதிக காட்சிகளில் அவரை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ரோகிணி பற்றிய ரகசியங்கள் வெளியே வந்த பின் ஜெயமணிக்கான காட்சிகள் பெரியளவில் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், நடிகர் ஜெயமணியின் மறைவு செய்தி சின்னத்திரை ரசிகர்களையும், அவருடன் பணியாற்றிய கலைஞர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி, அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஜெயமணியின் உடலுக்கு சிறகடிக்க ஆசை சீரியல் நட்சத்திரங்கள் மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜெயமணியின் மறைவு சின்னத்திரைக்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.