சன் டிவியில் கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிங்கப்பெண்ணே சீரியல் 2 ஆண்டுகளை கடந்து வெற்றிநடைபோட்டு வருகிறது. இந்த சீரியலில் மனிஷா மகேஷ் கதையின் நாயகியாக நடிக்கிறார். அவருடன் அமல்ஜித், தர்ஷக் கெளடா, ஞானசம்பந்தன், ரமா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. சிங்கப்பெண்ணே சீரியல் தான் டிஆர்பியில் நம்பர் 1 இடத்தை பிடித்து வருகிறது. அந்த அளவுக்கு அதன் திரைக்கதை விறுவிறுப்புடன் பயணித்து வருகிறது. தற்போது ஆனந்தி கர்ப்பமானது ஊருக்கே தெரிந்த நிலையில், பஞ்சாயத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
24
ஆனந்தியை ஊரைவிட்டு ஒதுக்கி வைக்க சொன்ன சுயம்பு
ஆனந்தி தன்னுடைய கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதே தனக்கு தெரியாது என வாதிட்டாலும் அதை பஞ்சாயத்தில் ஏற்க மறுக்கின்றனர். முதலில் அன்பு தான் காரணமாக இருக்கும் என அனைவரும் பேசி வந்த நிலையில், இதற்கும் அன்புவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை திட்டவட்டமாக கூறினார் ஆனந்தி. அதன்பின்னர் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் காரணமா என கேட்டு புயலை கிளப்பினார் சுயம்பு. இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்னர் நடந்தபோது சம்பந்தப்பட்டவர்களை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். ஆனந்தி விஷயத்திலும் அந்த முடிவை எடுக்க பரிந்துரைக்கிறார் சுயம்பு.
34
பஞ்சாயத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?
பஞ்சாயத்தும் அந்த முடிவை எடுக்க தயாராகி வந்த நேரத்தில், இதற்கு முன்னர் இதுபோன்ற ஒரு பிரச்சனைக்காக ஊரைவிட்டே ஒதுக்கி வைக்கப்பட்ட மனநலம் பாதித்த பெண் ஒருவர் பஞ்சாயத்துக்கு வந்து சரமாரி கேள்விகளை கேட்கிறார். இதனால் மனம்மாறிய பஞ்சாயத்தார், ஆனந்தி தன்னுடைய கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை நிரூபிக்க கால அவகாசம் கொடுக்கிறது. இதனால் ஆறுதல் அடையும் ஆனந்தியின் குடும்பத்தார், உன்னுடைய கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை கண்டுபிடித்து இந்த பஞ்சாயத்து முன் கொண்டுவந்து நிறுத்துவோம் என சபதம் எடுக்கின்றனர்.
ஆனந்தியும் தன் தந்தையிடம் நிச்சயமாக கண்டுபிடிப்பேன் என சூளுரைக்கிறார். இதே ஊர் முன்னிலையில் உங்க பொண்ணு தப்பானவ இல்லை என்பதை நிரூபித்துக் காட்டுவேன் என திட்டவட்டமாக கூறுகிறார். அவரின் இந்த முடிவால் இனி அடுத்தடுத்த எபிசோடுகள் அனல்பறக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க அவருடன் அன்புவும் களத்தில் இறங்க வாய்ப்பு உள்ளது. தன்னுடைய கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடித்து பஞ்சாயத்து முன் வந்து ஆனந்தி நிறுத்துவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.