
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி ஆஸ்பத்தியில் உயிருக்கு போராடி வரும் சூழலில், மறுபுறம் தர்ஷனுக்கான திருமண ஏற்பாடுகள் தடபுடலாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. திருமணத்திற்காக சிறப்பு பூஜை செய்ய வரும் பனிக்கர், இந்த கல்யாணத்தில் நிறைய பிரச்சனைகள் இருப்பதாக சொல்கிறார். அதுமட்டுமின்றி நந்தினி, ரேணுகா ஆகியோர் மனதில் வேறு ஒரு பெண் இருக்கும் விஷயத்தையும் போட்டுடைக்கிறார் பனிக்கர். மறுபுறம் ஜீவானந்தம் காணாமல் போனதால் பதறிப்போய் இருந்த பார்கவி, அவர் திரும்பி வந்ததால் நிம்மதி பெருமூச்சு விட்டார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஜீவானந்தத்திற்கு போன் போடும் ஜனனி, வீட்டில் இருந்து அனைவரும் மண்டபத்துக்கு சென்றுவிட்டதாக சொல்கிறார். கல்யாணத்துக்கு இரண்டு நாட்கள் இருக்கையில் எதற்காக சென்றார்கள் என ஜீவானந்தம் கேட்க, அவர்கள் ஏதோ திட்டம் போடுகிறார்கள் என சொல்கிறார் ஜனனி. பார்கவி, கல்யாண புடவையில் கழுத்து நிறைய நகையோடு, ஜீவானந்தம் முன் வந்து, நான் நினைச்சது நடந்திருமா சார் என கேட்கிறார். என்னுடைய உயிரை பணையம் வைத்தாவது உன்னைக் கொண்டுபோய் தர்ஷனிடம் சேர்த்துவிடுகிறேன் என சொல்கிறார் ஜீவானந்தம்.
பின்னர் சக்தி அவசர அவசரமாக கல்யாண மண்டபத்துக்கு வருகிறார். அங்கு நேராக தர்ஷனை பார்க்க செல்கிறார். அதை அறிவுக்கரசி தடுத்தும், தர்ஷனை மாடியில் இருந்து தரதரவென இழுத்து வந்து ஆதி குணசேகரன் முன் வந்து நிறுத்துகிறார். இவனால ஒரு செகண்ட் கூட நிற்க முடியல, என்ன பண்ணி வச்சிருக்காங்கனு தெரியல அண்ணேன். பெரிய வெளக்கென்ன மாதிரி நான் பாத்துக்குறேன்னு ஒரு பரதேசி சொன்னான்ல அவன இப்ப பேச சொல்லுங்க என சக்தி சொன்னதும் எகிறுகிறார் கதிர். பின்னர் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டதால் கல்யாண வீடே கலவர பூமியாக மாறுகிறது.
இருவரையும் பிரித்துவிட்ட ஆதி குணசேகரன், என்ன சக்தி வார்த்தை தடிக்குது, தர்ஷனுக்கு மேலுக்கு முடியல, மருந்து சாப்பிட்டிருக்கான். இத வச்சு எதாச்சும் விளையாட்டு காட்ட முடிவு பண்ணீருக்கியா என கேட்கிறார் ஆதி குணசேகரன். இதையடுத்து அவரிடம் எடுத்து சொல்லும் சக்தி, அவனுக்கு மேலுக்கு முடியவில்லை என்றால் ஏன் முடியலைனு கேட்டீங்களா என சொல்ல, கேட்கிற நிலைமையிலா என்னை வச்சிருக்கீங்க? எப்ப பார்த்தாலும் சண்டை, பிரச்சனை. பத்தாததுக்கு இவ ஆத்தா வேற ஆஸ்பத்திரில கிடக்குறா... இவன் மனசுல அந்த கவலை இருக்காதா என கேட்கிறார் குணசேகரன்.
தொடர்ந்து பேசும் சக்தி, கவலை இருந்தால் எப்படி இருப்பான். இப்ப எப்படி இருக்கான்னு பாருங்க. இந்த வித்தியாசம் கூட உங்களுக்கு தெரியலையா இல்ல தெரியாத மாதிரி இருக்கலாம்னு முடிவு பண்ணீட்டீங்களா என கேட்கிறார். சரி நான் முடிவு பண்ணுவது இருக்கட்டும் இப்ப நீ என்ன முடிவுல இருக்க என கேட்கிறார் ஆதி குணசேகரன், அதற்கு பதிலளிக்கும் சக்தி, எனக்கு இப்ப உடனே தர்ஷனை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போகனும், இவன் ஏன் இப்படி இருக்கான், இவனுக்கு என்ன பிரச்சனை என்ன செஞ்சா சரி ஆவான்னு தெரிஞ்சே ஆகணும் என ஒற்றைக்காலில் நிற்கிறார் சக்தி. இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.