
சின்னத்திரை சீரியல்களின் வெற்றியை நிர்ணயிப்பது அதன் டிஆர்பி தான். அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் சீரியல்களின் டிஆர்பி பட்டியல் வெளியிடப்படும். இதில் மக்கள் மத்தியில் எந்த சீரியலுக்கு அதிக வரவேற்பு இருக்கிறதோ அதற்கு அதிகப்படியான டிஆர்பி கிடைக்கும். அதுவே மக்கள் விரும்பாத சீரியல்களுக்கு கம்மியான டிஆர்பி கிடைக்கும். அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 39-வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வெளியாகி உள்ளது. இதில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகியவற்றில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல் எது என்பதை பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரைம் டைம் சீரியலாக கார்த்திகை தீபம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கார்த்திக் ராஜ் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிநடை போட்டு வரும் கார்த்திகை தீபம் சீரியல், இந்த வாரமும் 5.23 டிஆர்பி ரேட்டிங் உடன் 10வது இடத்தில் நீடிக்கிறது.
விஜய் டிவியில், நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் ஒன்று, இதில் ஸ்டாலின் மற்றும் நிரோஷா ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த சீரியல் கடந்த வாரம் 6.32 புள்ளிகளை பெற்றிருந்த நிலையில், இந்த வாரம் 6.17 டிஆர்பி பெற்று 9-வது இடத்திலேயே நீடிக்கிறது.
விஜய் டிவியில் பிரைம் டைம் சீரியல்களில் ஒன்றான சின்ன மருமகள் தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வந்தது. நவீன் மற்றும் ஸ்வேதா நடிக்கும் இந்த சீரியல் 6.31 டிஆர்பி ரேட்டிங் உடன் 8-ம் இடத்தில் உள்ளது. இந்த வாரம் முதல் இந்த சீரியல் இரவு 7.30 மணிக்கு மாற்றப்பட்டு உள்ளதால் இதன் டிஆர்பியிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சன் டிவி ஒளிபரப்பாகி வந்த புராண கதையம்சம் கொண்ட தொடர் தான் இராமாயணம். டப்பிங் தொடராக இருந்தாலும் இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இந்த சீரியல் அண்மையில் முடிவடைந்தது. இதன் இறுதி வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் 6.75 ஆகும். இதற்கு பதில் தற்போது ஹனுமன் என்கிற ஆன்மீக தொடர் ஒளிபரப்பாகிறது.
விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக இருந்த வந்த சிறகடிக்க ஆசை இந்த வாரம் கடும் சரிவை சந்தித்து உள்ளது. இந்த சீரியலின் சரிவுக்கு முக்கிய காரணம் அய்யனார் துணை சீரியல் தான். அது சிறகடிக்க ஆசை சீரியலை விட அதிக டிஆர்பி பெற்றதால், சிறகடிக்க ஆசை சீரியல் 7.61 புள்ளிகளுடன் ஆறாம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியல் தான் தொடர்ச்சியாக ஐந்தாம் இடத்தில் நங்கூரம் போட்டு இருந்தது. ஆனால் இந்த வாரம் அதற்கு ஆப்பு வைத்துவிட்டு, ஐந்தாம் இடத்தை தட்டிதூக்கி இருக்கிறது அய்யனார் துணை சீரியல். மதுமிதா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு 7.66 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது.
சன் டிவியில் சக்கைப்போடு போட்டு வரும் சீரியல்களில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் தர்ஷன் திருமண எபிசோடு கடந்த சில வாரங்களாக அனல்பறக்க இருந்ததால், அதற்கான டிஆர்பி ரேட்டிங்கும் அதிகரித்துள்ளது. இந்த சீரியல் 9.10 புள்ளிகள் உடன் 4ம் இடத்தில் நீடிக்கிறது.
சன் டிவியில் டிஆர்பியில் அடிவாங்கி வந்த அன்னம், கயல் மற்றும் மருமகள் ஆகிய மூன்று சீரியல்களையும் ஒன்றாக இணைத்து ஒன்றரை மணிநேரம் ஒளிபரப்பி வருகிறார்கள். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், டிஆர்பி ரேஸிலும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளதோடு இந்த வாரம் 9.27 ரேட்டிங்கையும் பெற்றிருக்கிறது.
சன் டிவியில் நம்பர் 1 சீரியலாக இருந்து வந்த சிங்கப்பெண்ணே, கடந்த சில வாரங்களாக இரண்டாம் இடத்திலேயே நீடிக்கிறது. அந்த சீரியலில் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க பல மாதங்கள் ஜவ்வாக இழுத்து வருவதால், ரசிகர்கள் மத்தியில் அதற்கான வரவேற்பு குறைந்துள்ளது. இதனால் இந்த வாரம் அந்த சீரியலுக்கு 9.43 புள்ளிகள் மட்டுமே கிடைத்துள்ளது.
டிஆர்பி ரேஸில் கடந்த சில வாரங்களாக முதலிடத்தில் கெத்தாக அமர்ந்திருக்கும் சீரியல் என்றால் அது மூன்று முடிச்சு தொடர் தான். ஸ்வாதி கொண்டே கதையின் நாயகியாக நடித்து வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதால். இதனால் இந்த வாரமும் 9.97 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.