ஆப்பிள், சாம்சங்கிற்கு சவாலாக களமிறங்கும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்10 சீரிஸ். உலகின் முதல் 'டிரிபிள் 200MP' கேமரா, 8000mAh பேட்டரியுடன் வெளியாகும் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள் மற்றும் வெளியீட்டு விவரம் வெளியாகி உள்ளது.
உலகின் முதல் டிரிபிள் 200MP கேமரா, 8,000mAh பேட்டரி
ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ (OPPO), தனது புதிய முதன்மைத் தயாரிப்பான ஃபைண்ட் எக்ஸ்10 சீரிஸ் (Find X10 Series) ஸ்மார்ட்போன்களை அக்.21 அன்று ஸ்பெயினின் மல்லோர்கா நகரில் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. முன்னணி கேமரா தயாரிப்பு நிறுவனமான ஹேசல்பிளாட் (Hasselblad) நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடரில், ஸ்மார்ட்போன் வரலாற்றிலேயே முதன்முறையாக டிரிபிள் 200MP கேமரா சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் (Find X10 Pro Max) மாடலில் அல்ட்ரா-வைட், முதன்மை (Main) மற்றும் டெலிஃபோட்டோ என 3 கேமராக்களிலுமே தலா 200 மெகாபிக்சல் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இத்தகைய கேமரா கட்டமைப்பு இதுவரை எந்த ஸ்மார்ட்போனிலும் இடம்பெற்றதில்லை என ஒப்போ தெரிவித்துள்ளது. இதன் வழக்கமான ஃபைண்ட் எக்ஸ்10 (Find X10) மாடலில் இரட்டை (Dual) 200MP கேமரா அமைப்பு இடம் பெற்றுள்ளது.
இந்த 2 மாடல்களிலுமே ஒப்போவின் புதிய 'LUMO True Image Engine' பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பிரத்யேக சென்சார் மூலம் நிறம் மற்றும் ஒளி அமைப்புகளைத் துல்லியமாக நிர்வகித்து, காட்சிகளை இயல்பான தரத்தில் படம்பிடிக்க உதவும் கம்ப்யூட்டேஷனல் போட்டோகிராபி அமைப்பாகும்.
இதுகுறித்து பேசிய ஒப்போ நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும் தலைமைத் தயாரிப்பு அதிகாரியுமான பீட் லாவ் (Pete Lau), "ஹேசல்பிளாட் நிறுவனத்துடன் இணைந்து ஃபைண்ட் எக்ஸ்10 சீரிஸ் மூலம் மொபைல் புகைப்படத் துறையில் அடுத்தகட்டப் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளோம். கூடுதல் அமைப்புகள் ஏதுமின்றி, கேமராவைத் திறந்து நாம் கண்களால் காணும் காட்சிகளை அப்படியே இயல்பான வண்ணங்களோடு படம் பிடிக்க முடியும்" என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பானது சாம்சங் கேலக்ஸி எஸ் சீரிஸ் மற்றும் ஆப்பிள் ஐஃபோன் ப்ரோ மாடல்களுக்குக் கடும் போட்டியாக அமையும் எனப் பார்க்கப்படுகிறது.
35
முக்கியச் சிறப்பம்சங்கள்
பின்புறமுள்ள 3 கேமராக்களிலுமே 200 மெகாபிக்சல் தரம், 8,000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி, மீடியாடெக் டைமன்சிட்டி 9600 ப்ரோ (2 நானோமீட்டர் தொழில்நுட்பம்). ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் மாடல் 2 நானோமீட்டர் (2nm) முறையில் தயாரிக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 9600 ப்ரோ (Dimensity 9600 Pro) சிப்செட் உடன் வெளிவரும் முதல் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும். இது சிறந்த செயல்திறனையும் குறைந்த மின்தேவையையும் வழங்கும். வழக்கமான ஃபைண்ட் எக்ஸ்10 மாடலில் டைமன்சிட்டி 9600M பிராசஸர் இடம்பெற்றுள்ளது.
வழக்கமான லித்தியம்-அயன் பேட்டரிகளை விட அதிக ஆற்றல் அடர்த்தி கொண்ட சிலிக்கான்-கார்பன் (Silicon-Carbon) தொழில்நுட்பத்திலான 8,000mAh திறன் கொண்ட பேட்டரி இதில் வழங்கப்பட்டுள்ளது. ஒரே சார்ஜில் இரண்டு நாட்கள் வரை இதைப் பயன்படுத்த முடியும் என்றும், ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பயன்படுத்திய பிறகும் பேட்டரி தனது அசல் திறனில் 80 சதவீதத்திற்கும் மேல் தக்கவைத்துக்கொள்ளும் என்றும் ஒப்போ கூறுகிறது (சில குறிப்பிட்ட சந்தைகளில் 7,150mAh திறன் கொண்ட பேட்டரியுடன் இது வெளியாகலாம்).
வீடியோ பதிவைப் பொறுத்தவரை, 3 பின்புற கேமராக்களிலும் 4K 120fps மற்றும் 8K 30fps தரத்தில் வீடியோ எடுக்க முடியும். அத்துடன் கண்டெண்ட் கிரியேட்டர்களுக்காக காட்சிகளைப் பிந்தைய எடிட்டிங்கில் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ள உதவும் ‘ஓபன் கேட் கேப்சர்’ (Open Gate Capture) அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் லூனா ஒயிட் (Luna White) மாடலின் கேமரா பகுதியில் மேட் சில்வர் மெட்டாலிக் ஃபினிஷ், நுணுக்கமான வேலைப்பாடுகள் மற்றும் ஹேசல்பிளாட்டின் பிரத்யேக ஆரஞ்சு வண்ண வளையம் இடம்பெற்றுள்ளது. இதன் பின்புற பேனல் மென்மையான மேட் கண்ணாடி மற்றும் துணி போன்ற தோற்றமுடைய வடிவைப்புகளைக் கொண்டுள்ளது.
ஃபைண்ட் எக்ஸ்10 மாடல் கிளேசியர் ப்ளூ, க்ளோ கோரல் மற்றும் மிஸ்ட் கிரே ஆகிய நிறங்களிலும், ப்ரோ மேக்ஸ் மாடல் டைட்டானியம் கிரே மற்றும் லூனா ஒயிட் ஆகிய நிறங்களிலும் விற்பனைக்கு வரும்.
55
மென்பொருள் & இந்திய சந்தை முக்கியத்துவம்
2 மாடல்களும் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஒப்போவின் புதிய கலர்ஓஎஸ் 17 மூலம் இயங்குகின்றன. இதில் இடம்பெற்றுள்ள 'AI Mind Pilot with Agent Mode' என்ற வசதி, சாதனத்தில் உள்ள கோப்புகள் மற்றும் புகைப்படங்களைச் செயற்கை நுண்ணறிவோடு (AI) இணைத்து, குரல் அல்லது எழுத்து வழியான கட்டளைகள் மூலம் பணிகளை விரைவாக முடிக்க உதவுகிறது.
சர்வதேச அளவில் ஒப்போவிற்கு இந்தியா 2-வது பெரிய சந்தையாகும். வழக்கமாக உலகளவில் வெளியாகும் ஒப்போவின் முதன்மை மாடல்கள் அடுத்த சில வாரங்களிலேயே இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதால், ஆப்பிள் மற்றும் சாம்சங் பிரீமியம் மாடல்களுக்கு மாற்றாக இதை எதிர்பார்க்கும் இந்திய நுகர்வோரிடையே இது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்த 2 மாடல்களின் விலையையும் ஒப்போ இன்னும் அறிவிக்கவில்லை. முழுமையான விவரக்குறிப்புகள், இந்திய வெளியீடு மற்றும் அதிகாரப்பூர்வ விலை விவரங்கள் அக்.21 அன்று நடைபெறும் உலகளாவிய அறிமுக நிகழ்வில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.