பொலிவியாவின் அடர்ந்த 'யுங்காஸ்' மேகமூட்டக் காடுகளில் மறைந்திருந்த புதிய சிறிய காட்டுப்பூனையை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு 'லியோபார்டுஸ் தில்காயோ' (Leopardus tilcayo) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அடர்ந்த காட்டில் சிக்கிய உலகின் புதிய காட்டுப்பூனை!
தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் மேகமூட்டமும் அடர்ந்த ஈரப்பதமும் நிறைந்த 'யுங்காஸ்' (Yungas) மலைக்காடுகள், பல நூறு ஆண்டுகளாக ஒரு பேரதிசயத்தை உலகிற்குத் தெரியாமல் ஒளித்து வைத்திருந்தன. அந்த மாயக் காடுகளில் பதுங்கியிருந்த ஒரு குட்டி விலங்கு, தற்போது உலகப் பூனைகளின் வரலாற்றுப் பக்கங்களையே தலைகீழாக மாற்றி எழுதியுள்ளது.
கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக விவரிக்கப்பட்டு, பெயரிடப்பட்ட முதல் வாழும் பூனை இனமாக 'லியோபார்டுஸ் தில்காயோ' (Leopardus tilcayo) என்ற இந்த விசித்திர விலங்கை அறிவியலாளர்கள் அதிகாரப்பூர்வமாக அடையாளம் கண்டுள்ளனர்.
24
100 ஆண்டுகளுக்குப் பின் ஒரு வரலாற்றுத் திருப்புமுனை!
உள்ளூர் மக்களால் செல்லமாக 'தில்காயோ' என அழைக்கப்படும் இந்தப் பூனை, பார்ப்பதற்கு அச்சு அசல் மினியேச்சர் சிறுத்தை போலவே காட்சியளிக்கிறது. இதன் மொத்த உடலமைப்பே சுமார் 46 சென்டிமீட்டர் நீளமும், வெறும் 1.4 கிலோகிராம் எடையும் மட்டும்தான்! நாம் வீட்டில் வளர்க்கும் பூனைகளை விடவும் மிகச் சிறியது.
பொலிவியக் காடுகளில் தென்பட்ட இந்த விசித்திரப் பூனை, ஏற்கனவே அறியப்பட்ட சிறுத்தைப் பூனைகளிலிருந்து (Tiger cats) தோற்றத்தில் சற்றே மாறுபட்டு இருப்பதை ஆய்வாளர்கள் கவனித்தனர். வெளிப்பழுப்பு நிற உரோமத்தின் மீது ஒழுங்கற்ற வடிவத்தில் பதிந்துள்ள ரோசெட் (rosettes) புள்ளிகள்தான் இதன் தனித்துவமான அடையாளம் என நேஷனல் ஜியோகிராஃபிக் ஆய்வாளரும், முதன்மை ஆய்வுக் கட்டுரை ஆசிரியருமான பாவோலா நோகேல்ஸ்-அஸ்காரன்ஸ் வியப்புடன் விவரிக்கிறார்.
34
14 லட்சம் ஆண்டுகால ரகசியம்: டி.என்.ஏ தந்த மெகா திருப்பம்!
சிறுத்தைப் பூனை இனங்கள் ஒன்றுடன் ஒன்று அச்சு அசல் ஒற்றுமையுடன் இருப்பதால், மேலோட்டமாகப் பார்த்துப் பிரித்தறிவது அசாத்தியமான காரியம். பல தலைமுறைகளாக இவை ஒரே இனக் குழுவாகவே வகைப்படுத்தப்பட்டு வந்தன. இந்த மர்மத்தை உடைக்க அருங்காட்சியக மாதிரிகள் உள்பட தென் அமெரிக்கா முழுவதும் இருந்து 38 பூனைகளின் டி.என்.ஏ மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அப்போதுதான் முடிவுகள் வெளிவந்தன. ஒரே குழுவாகக் கருதப்பட்ட அந்தத் தொகுப்பில், மரபணு ரீதியாக 5 வெவ்வேறு தனித்தனி இனங்கள் புதைந்து கிடந்தது தெரியவந்தது.
மரபணுத் தடயங்களின்படி, இந்த 'தில்காயோ' இனம் மற்ற சிறுத்தைப் பூனைகளிலிருந்து சுமார் 14 லட்சம் (1.4 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பே தனியாகப் பிரிந்து வாழத் தொடங்கிவிட்டது. இந்த அபார மரபணு இடைவெளியே, இது முற்றிலும் புதிய ஒரு தனி இனம் என்பதை அறிவியல்பூர்வமாக உறுதிசெய்தது. 'கரண்ட் பயாலஜி' (Current Biology) இதழில் வெளியான இந்த விரிவான ஆய்வில், பெரு நாட்டின் யுங்காஸ் பகுதியில் 'லியோபார்டுஸ் டைக்ரினஸ் அந்திசுயோ' (Leopardus tigrinus antisuyo) என்ற மற்றொரு சிறுத்தைப் பூனை துணையினமும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அழிவின் விளிம்பில் தவிக்கும் புதிய சிறுத்தைப் பூனை!
அறிவியலாளர்களால் இதுவரை வெறும் உயிருள்ள தில்காயோ பூனைகளையும், சில கேமரா பதிவுகளையும் (Camera-traps) மட்டுமே கண்காணிக்க முடிந்துள்ளது. மனிதக் கண்களில் எளிதில் படாத இந்த மர்மப் பூனை பெரும்பாலும் இரவில் மட்டுமே வேட்டையாடித் திரிகிறது என்றும், சிறிய வகை எலிகளை உணவாகக் கொள்கிறது என்றும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வாழ்க்கை முறை குறித்த பல ரகசியங்கள் இன்னும் அடர்ந்த காட்டுக்குள்ளேயே புதைந்து கிடக்கின்றன.
இந்த வியக்கத்தக்க கண்டுபிடிப்பு விலங்கியல் உலகைக் கொண்டாட வைத்தாலும், அடுத்த கணமே ஒரு கசப்பான எச்சரிக்கையையும் முன்வைக்கிறது. இந்தப் பூனைகள் வாழும் அமைதியான வாழ்விடங்கள் மிக வேகமாகச் சுருங்கி வருகின்றன. தீவிர காடழிப்பு, பெருகிவரும் விவசாயம், காட்டுத்தீ மற்றும் தொடர் சுரங்கத் தொழில்கள் ஆகியவை இவற்றின் வாழ்வாதாரத்தை மரண விளிம்பிற்குத் தள்ளியுள்ளன.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.