ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும், ஆப் டெவலப்பர்களுக்கும் (App Developers) ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த சட்டப் போராட்டத்தின் எதிரொலியாக, தனது பிளே ஸ்டோரில் (Play Store) வசூலிக்கப்படும் கமிஷன் தொகையை வெகுவாகக் குறைக்க கூகுள் முன்வந்துள்ளது. அத்துடன், ஆண்ட்ராய்டு (Android) இயங்குதளத்தில் மாற்று ஆப் ஸ்டோர்களை (Alternative App Stores) அனுமதிக்கும் புதிய முடிவையும் எடுத்துள்ளது.
எபிக் கேம்ஸ் (Epic Games) நிறுவனத்துடன் 2020-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த 'ஏகபோக உரிமை' (Monopoly) தொடர்பான வழக்கில், கூகுளுக்கு எதிரான தீர்ப்புகள் வந்ததையடுத்து இந்த அதிரடி மாற்றங்கள் நிகழவுள்ளன. சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் கூகுள் தாக்கல் செய்துள்ள இந்த புதிய முன்மொழிவுகள், உலகளாவிய தொழில்நுட்பச் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
24
எவ்வளவு கட்டணம் குறைகிறது?
தற்போது பிளே ஸ்டோரில் உள்ள ஆப்கள் மூலம் நடைபெறும் சப்ஸ்கிரிப்ஷன்கள் (Subscriptions) மற்றும் இ-காமர்ஸ் பரிவர்த்தனைகளுக்கு 15% முதல் 30% வரை கமிஷன் தொகையை கூகுள் வசூலித்து வருகிறது. புதிய முன்மொழிவின்படி, இந்த கமிஷன் கட்டணம் 10% முதல் 20% ஆகக் குறைக்கப்படும்.
மேலும், கட்டணங்களைச் செலுத்துவதற்கான பேமெண்ட் பிராசஸிங்கிற்கு (Payment processing) 5% கட்டணத்துடன் புதிய விருப்பத் தேர்வையும் (Option) கூகுள் அறிமுகப்படுத்தவுள்ளது. ஆப் டெவலப்பர்கள் கூகுளின் பேமெண்ட் சிஸ்டத்திற்குப் பதிலாக, மூன்றாம் தரப்பு (Third-party) பேமெண்ட் சிஸ்டம்களைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளவும் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
34
மாற்று ஆப் ஸ்டோர்களுக்கு அனுமதி
இந்த அறிவிப்பின் மிக முக்கியமான அம்சம், மாற்று ஆப் ஸ்டோர்களை கூகுள் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்போவது தான். இதற்காக ஒரு புதிய 'சான்றிதழ்' (Certification) முறையை கூகுள் கொண்டு வரவுள்ளது. இந்தச் சான்றிதழைப் பெறும் மாற்று ஆப் ஸ்டோர்களில் இருந்து, பயனர்கள் எவ்வித செக்யூரிட்டி வார்னிங் (Security Warnings) எச்சரிக்கைகளுமின்றி எளிதாக ஆப்களை டவுன்லோட் செய்துகொள்ள முடியும்.
இந்தச் சான்றிதழ் கட்டாயமில்லை என்றாலும், கூகுளிடம் பதிவு செய்து சான்றிதழ் பெற்றால் பயனர்களின் நம்பகத்தன்மையை எளிதில் பெறலாம். "ஆண்ட்ராய்டு இயங்குதளம் உண்மையிலேயே ஒரு திறந்த தளமாக (Open platform) மாற இது வழிவகுத்துள்ளது" என எபிக் கேம்ஸ் நிறுவனத்தின் சிஇஓ டிம் ஸ்வீனி (Tim Sweeney) இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார்.
இந்தக் கட்டணக் குறைப்பு மற்றும் புதிய விதிமுறைகளை ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறும் நீதிமன்ற விசாரணையில் நீதிபதி ஜேம்ஸ் டொனாட்டோ அங்கீகரிக்க வேண்டும். அதன்பிறகு, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இந்த புதிய விதிமுறைகளை கூகுள் முதலில் அமல்படுத்தவுள்ளது. அதைத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள மற்ற நாடுகளின் ஒப்புதல்களைப் பெற்று இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தவும் கூகுள் திட்டமிட்டுள்ளது.
அதேவேளையில், எபிக் கேம்ஸ் நிறுவனம் ஆப்பிள் (Apple) நிறுவனத்திற்கு எதிராகவும் இதேபோன்ற ஒரு வழக்கை தொடர்ந்துள்ளதும், அதில் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஏகபோக உரிமையைக் கொண்டிருக்கவில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், கூகுளின் இந்த இறங்கி வந்த முடிவு, பல கோடி டெவலப்பர்களுக்கும், பயனர்களுக்கும் புதிய சுதந்திரத்தை அளித்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.