Published : May 26, 2026, 09:03 AM ISTUpdated : May 26, 2026, 09:30 AM IST
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மே மாத சம்பளம் மற்றும் அகவிலைப்படி நிலுவைத்தொகை கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாநில நிர்வாகத்தின் மிக முக்கியமான தூண்களாக விளங்குகிறார்கள். தமிழ்நாட்டில் சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும், அவர்களுக்கு இணையாக 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் கடைசி நாளில் வங்கி கணக்கில் சம்பளம் கிரெடிட் ஆகிவிடும்.
25
நிதி மனிதவள மேலாண்மை
இதற்காக ஒவ்வொரு மாத சம்பள பட்டியல் ஒருங்கிணைந்த நிதி மனிதவள மேலாண்மை (IFHRMS) என்ற ஆன்லைன் மென்பொருள் மூலம் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதியே தயாராகிவிடும். அதைத் தொடர்ந்து, அந்தந்தத் துறை ஊழியர்கள் அதைச் சரிபார்த்து 25-ம் தேதிக்குள் கருவூலத்திற்கு (Treasury) அனுப்பி வைப்பார்கள். இதன் மூலம் மாதத்தின் இறுதி நாளில் (30 அல்லது 31-ஆம் தேதி) அனைவருக்கும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
35
சம்பளம் வருவதில் சிக்கல்
ஆனால், நடப்பு மே மாதத்தில் கடந்த 22-ஆம் தேதி கடந்தும் இந்த மென்பொருளில் சம்பளப் பட்டியலைப் பதிவேற்றம் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. இதனால் ஒட்டுமொத்த ஊதிய விபரங்களையும் கருவூலத்திற்கு அனுப்புவதில் சிக்கல் நீடிக்கிறது. இன்னமும் மென்பொருள் நிறுவனத்தின் சாப்ட்வேர் திறக்கப்படாததால் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியின் போது அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், "அகவிலைப்படி அறிவிப்பதில் காலதாமதம் ஏற்பட்டாலும், அது அறிவிக்கப்படும் மாதத்தின் சம்பளத்துடனேயே நிலுவைத் தொகையும் (Arrears) சேர்த்து வழங்கப்படும்" என்ற உறுதியை அளித்து, கடந்த 3 ஆண்டுகளாக அதைத் தொடர்ந்தும் நிறைவேற்றி வந்தார். தற்போதைய புதிய அரசும் 2% அகவிலைப்படியை அறிவித்துவிட்டாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதனை ஊழியர்களுக்குக் கொண்டு சேர்க்க முடியாத இக்கட்டான சூழல் நிலவுகிறது. அகவிலைப்படி உயர்வை மட்டுமல்ல மாத ஊதியத்தையும் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
55
ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது
சம்பளப் பட்டியலுடன் 4 மாத கால அகவிலைப்படி நிலுவைத்தொகையையும் இணைத்து வழங்க, குறிப்பிட்ட அந்த மென்பொருள் நிறுவனம் தனது கணினி அமைப்பைத் திறந்து சரி செய்ய வேண்டும். ஆனால், "தமிழக அரசுடன் எங்களுக்கு இருந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது" எனக் கூறி, இந்தச் சிக்கலைத் தீர்க்க அந்த மென்பொருள் நிறுவனம் மறுத்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக பதவியேற்றுள்ள அரசு உடனடியாக தலையிட்டு இப்பிரச்னையை தீர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் உள்ளனர்.