ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை
வட சென்னை பகுதியில் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர் ஆம்ஸ்ட்ராங், அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் மாநில தலைவராக உள்ளார். இவர் ஏழை மற்றும் எளிய மாணவர்கள் சட்டம் படிப்பதற்கு உறுதுணையாக இருந்துள்ளார். மேலும் பொதுமக்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் அளவிற்கு வசூலிக்கப்பட்டு மோசடி செய்யப்பட்ட ஆருத்ரா நிதி நிறுவனத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை மீட்டுக்கொடுக்கவும் ஆம்ஸ்ட்ராங் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
11 பேர் சரண்- என்கவுன்டரில் ஒருவர் சுட்டுக்கொலை
இந்த சூழ்நிலையில் தான் கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் தனது புதிய வீட்டின் கட்டுமான பணியை பார்வையிட்டு வந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை துடிக்க, துடிக்க வெட்டிக்கொன்றனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக 11 பேர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் ஆற்காடு சுரேஷ் வழக்கில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருந்ததால் பழிக்கு பழிவாங்கவே கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு தெரிவித்தார்.
Armstrong
திமுக நிர்வாகிக்கு தொடர்பு
இருந்த போதும் இந்த கொலை வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழ்நிலையில் இந்த கொலை வழக்கில் முக்கிய நபரான திருவேங்டம் போலீஸ் காவலில் இருந்து தப்பி செல்ல முயன்றதால் கடந்த வாரம் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இந்தநிலையில் திருநின்றவூரைச் சேர்ந்த திமுகவை வழக்கறிஞர் அருள் என்பவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். பொன்னை பாலுவின் மைத்துனரான அருளின் மொபைல் போன் தொடர்புகள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதிமுக நிர்வாகி பணம் சப்ளை
அப்போது, சென்னை ஜாம்பஜாரைச் சேர்ந்த திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அதிமுக இணைச் செயலாளர் மலர்கொடி என்பவருடன், அருள் அடிக்கடி பேசி வந்ததும், இருவருக்கும் லட்சக்கணக்கில் பண பரிவர்த்தனை நடந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக ரவுடி தோட்டம் சேகரின் மூன்றாவது மனைவி மலர்கொடி மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.
யார் இந்த மலர் கொடி.?
மலர் கொடியின் கணவர் தோட்டம் சேகர் என அழைக்கப்படுவார். சென்னையில் மிகப்பெரிய ரவுடியாக வலம் வந்த இவர் அதிமுகவின் பிரசார பாடகராகவும் இருந்துள்ளார். இவர் கடந்த 2001ல், மயிலாப்பூர் சிவகுமார் என்ற ரவுடியால் கொல்லப்பட்டார். சுமார் 19ஆண்டுகளுக்கு பிறகு மலர் கொடியின் மகனான அழகர் ராஜா ரவுடி சிவக்குமாரை கொலை செய்து சிறையில் உள்ளார்.
50 லட்சம் பணம் கைமாறியதா.?
இந்த நிலையில் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக மலர்க்கொடி மற்றும் அவரின் உதவியாளர் ஹரிஹரன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் இருவருக்கும் தொடர்பு இருப்பதும், கூலிப்படையினருக்கு, மலர்க்கொடி வாயிலாக, 50 லட்சம் ரூபாய் வரை கைமாறியதும் தெரியவந்தது. இதன் காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொலையில் வேறு முக்கிய நபர்கள் யார்.? யாருக்கு தொடர்பு உள்ளது என போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.