அதிமுகவின் மூத்த தலைவர் சி.வி.சண்முகம் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து ஒரு இடம் காலியானது. சட்டமனற உறுப்பினர்களின் பெரும்பான்மை அடிப்படையில் நடிகர் விஜய்யின் தவெகவில் ஒருவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைக்கும் வாய்ப்பு கனிந்தது. தவெக சார்பில் முதன் முதலாக டெல்லி யார் செல்ல போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், விஜய் பெருந்தன்மையாக மாநிலங்களவை எம்.பி. பதவியை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கினார்.
தவெக தயவில் எம்.பி.யாகும் பிரவீன் சக்கரவர்த்தி
இந்த நிலையில், மாநிலங்களவை எம்.பி பதவிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவருமான பிரவீன் சக்கரவர்த்தி அதிகாரப்பூர்வ வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்த பிரவீன் சக்கரவர்த்தி, ''தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி. தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.