பள்ளி மாணவர்களுக்கு எது நடந்தாலும் ஆசிரியர்கள் தான் பொறுப்பு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி! எதற்காக தெரியுமா?

First Published Oct 9, 2024, 10:14 PM IST

School Education Department: கடந்த ஆண்டு தென் மாவட்டங்களில் ஏற்பட்டது போல் எந்த பாதிப்பும் இந்த முறை ஏற்படக்கூடாது என்பதற்காக  பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பருவமழை தொடக்கத்திற்கு முன்னரே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பலி எண்ணிக்கையும் உயர்ந்தது. தென்னிந்தியாவிலும் பல்வேறு இடங்களில் மழை கொட்டித்தீர்த்தது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் குறைவான மழையே பெய்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை தொடர்ந்ததும் அதிக அளவு மழை பெய்யும் என்று கணிக்கப்படுகிறது. ஆகையால் பாதிப்பும் அதிகமாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த பருவமழையில் தீவிரமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக 3 மாதங்கள் வரை நின்று பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் மொத்தமாக கொட்டி தீர்த்து விடுகிறது.  இதனால் எதிர்ப்பாராத வெள்ளம் மற்றும் பாதிப்புகள், பொருள் இழப்பு மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுத்துகிறது. 

Latest Videos


கடந்தாண்டு சென்னையில் பாதிப்புகள் ஏற்பட்டதைபோல தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை பருவமழையால் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது. ஓராண்டுக்கு பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் பெய்ததால் அந்த நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதுபோன்ற எந்த பாதிப்பும் இந்த முறை ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னேற்பாடுகள் நடவடிக்கைளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனிடையே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 15ம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டு தென் தமிழகத்தைக் காட்டிலும் வட தமிழகத்தில் நல்ல மழை பொழிவு அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலுக்கும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்களின் பாதுகாப்பு, பள்ளிகளில் மின் இணைப்புகளைக் கண்காணிப்பது, வடிகால்களை சுத்தம் செய்வது திறந்தவெளி கால்வாய்களை தூர்வாரி மூடுவது, குழிகளை நிரப்புவது, மாணவர்களின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் மரங்கள், மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல் வேண்டும். பேரிடர் காலங்களில் பாதிப்பிற்குள்ளாகும் மக்களை பள்ளிகளில் தங்கவைக்க பள்ளி மற்றும் உணவுக் கூடங்களில் சாவி வைத்திருக்கும் பொறுப்பாளர் விவரங்கள் தொடர்புடைய வருவாய்த் துறை அலுவலர்களுக்கு அளிக்க வேண்டும்.

பள்ளி கட்டடங்களின் மேற்கூரையில் உரிய தரைத்தளம் சரியாகவும், பாதுகாப்பாகவும் அமைந்துள்ளதை ஆய்வு செய்து புதிய பராமரித்தலுக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இடிக்கப்பட வேண்டிய கட்டடங்கள் இடிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறிய கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தால் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் இடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கலாம். பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி மேற்கூரைகளில் தண்ணீர் தேங்குவதைக் கண்காணித்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பலவீனமான மற்றும் பழுதடைந்துள்ள கட்டிடங்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்தல் வேண்டும். பேரிடர் காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்து மாணவர்க்கு தெரிவித்தல் வேண்டும். விடுமுறைக் காலங்களில் பள்ளிக் கட்டிடங்களை குறிப்பாக மேற்கூரையினை தூய்மையாக பராமரிக்க 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் உதவியுடன் தேவையான பணிகளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் மாணவர்கள் சென்று குளிப்பதை தவிர்க்க பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். மாணவர்கள் மிதிவண்டிகளில் பள்ளிக்கு வரும்போது பாதுகாப்பாக வர அறிவுரை கூறவேண்டும். மழைக் காலங்களில் மாணவர்களும், அவர்தம் உடைமைகளும் மழையில் நனையாமல் இருக்கும் பொருட்டு மழைக் கோட்டுகளையோ அல்லது குடைகளையோ பயன்படுத்த அறிவுரை வழங்கவேண்டும். தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே சுற்றுச்சுவர் உறுதித் தன்மையை கண்காணிக்க வேண்டும். பழுதடைந்துள்ள சுற்றுச்சுவர் பகுதிகளை சுற்றி வேலி அல்லது தடுப்புகளை ஏற்படுத்திட வேண்டும்.

மழையின் காரணமாக பள்ளியின் சில வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் பாதிக்கப்பட்டிருப்பின் அதனை பயன்படுத்தாமல் பூட்டிவைக்க வேண்டும். அனைத்து மின் இணைப்புகள் சரியாக உள்ளதா மற்றும் மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிபடுத்திடவும், தேவையெனில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து வைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள். கழிவுநீர் தொட்டி, மற்றும் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை மூடி வைக்க வேண்டும். 

மழைக்காலங்களில் ஏரிகள் ஆறுகளில் நீர்ப்பெருக்கு அதிகம் உடைப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், விடுமுறை காலங்களில் மாணவர்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும். மழைக்காலங்களில் இடி மின்னல் போன்வற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்குவது கூடாது என தலைமை ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர்மின் அழுத்தமுள்ள மின்கம்பங்கள் மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருப்பின் மின்வாரியத்தின் துணையுடன் அவைகளை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!