தலைநகர் சென்னையில் மாநிலக் கல்லூரி - பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையேயான மோதல் தொடர் கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக உன்னுடைய கல்லூரி பெருசா? என்னுடைய கல்லூரி பெருசா? ரூட் தல மோதல்கள் பேருந்து மற்றும் ரயில்களில் ஏற்படுகின்றன.
இது தொடர்பாக காவல்துறை பல்வேறு எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் மாணவர்கள் இடையிலான மோதல் போக்கு தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இதனால், கல்லூரி மாணவர்கள் பேருந்து மற்றும் ரயில்களில் பொதுமக்கள் சென்றாலே ஒரு வித பயத்துடனே செல்கின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்பாடி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் சுந்தர். சென்னை மாநிலக்கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 4ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சுந்தர் வந்த போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர், தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தி மற்றும் ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சுந்தரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.
இந்த சம்பவத்தை அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுந்தரை மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சந்துரு, யுவராஜ், ஈஸ்வர், ஹரி பிரசாத் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரூட்டு தல விவகாரத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றது தெரியவந்தது.
இந்நிலையில், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் சுந்தர் இன்று காலை உயிரிழந்தார். இதனையத்து, போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பச்சையப்பன் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி, கல்லூரிக்கு வரும் மின்சார ரயில் வழித்தடங்கள் ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்களில் பயணிக்கும் மாணவர்களின் கல்லூரி அடையாள அட்டைகளும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
இதனிடையே மாணவர் சுந்தர் தாக்கப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று காலை 11 மணிக்கு மேல் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. நாளை மற்றும் வரும் திங்கட்கிழமை வரை 4 நாட்களுக்கு மாநிலக் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவர் சுந்தருக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் மெளன அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.