Air Show: மெரினா கடற்கரையில் கடல் அலையை மிஞ்சும் மக்கள் அலை! ஸ்தம்பித்த மின்சார ரயில், மெட்ரோ ரயில் நிலையம்!

First Published | Oct 6, 2024, 12:43 PM IST

Chennai Air Show: இந்திய விமானப்படையின் 93-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்ட விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 72 விமானங்கள் வான் சாகசங்களில் ஈடுபடும் இந்த நிகழ்வில் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி தொடங்கப்பட்டது. விமானப் படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் தற்போது சென்னையில் இன்று மிகப் பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கி இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் இதை இலவசமாக கண்டு ரசிக்கலாம்.

மெரினா கடற்கரையில் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகளை காணலாம். இந்திய விமானப்படையின் வகை வகையான 72 விமானங்கள் காண்போரை கவர்ந்திழுக்கும் ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபடும். விமானக் கண்காட்சியில், வானில் லாவகமாக வந்து குட்டிக்கரணங்கள் அடித்து வியப்புக்குள்ளாக்கும் ஆகாஷ் கங்கா அணி, ஸ்கைடைவிங் கலையில் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்கள் நிகழ்த்தும் சூர்யகிரண் ஏரோபாட்டிக் டீம், வான் நடனத்தில் ஈடுபடக்கூடிய சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவை தங்களது வான்கலைகளால் மக்களை பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது.

Latest Videos


இதுமட்டுமில்லாமல்  உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகுரக போர் விமானம் தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் டகோட்டா, ஹார்வர்ட் போன்ற பாரம்பரிய பெருமைவாய்ந்த பழங்கால விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் என அனைத்துவகை விமானங்களும் இந்த சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் ஆர்வமுடன் பொதுமக்கள் மெரினாவுக்கு வருகை தந்துள்ளனர். குடும்பம் குடும்பமாக மெரினா கடற்கரைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருகை தந்துள்ளனர். கடல் அலைக்கும் மக்கள் அலைக்கும் மேலே பறந்த ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் சாகசங்களில் ஈடுபட்டு வருவதை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகிறனர். 

இதனிடையே மெரினாவில் நடைபற்று வரும் விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண செல்வதற்காக, வேளச்சேரி ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வேளச்சேரி ரயில் நிலையத்தில் எங்கும் மனித தலைகளாகவே காட்சி அளித்தன. அதேபோல் மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டுக்கடங்காமல் கூட்டம் அலைமோதியது. மெரினாவில் நடைபெறும் விமான சாகசத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்பதால் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் வைரலாகி வருகிறது. 

சென்னையில் நடைபெறும் சாகச நிகழ்ச்சியைக் காண 15 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்நிகழ்வை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என விமானப் படை தரப்பிலும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!