G K Vasan meets Minister Amit Shah : தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் மூப்பனார், அக்கட்சி மீதான அதிருப்தி காரணமாக அங்கிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார். மேலும் சைக்கிள் சின்னத்தையும் பெற்ற அவர், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கடும் போட்டியாக இருந்தார்.
இந்த நிலையில் அவரது மறைவிற்கு பிறகு தமாகவை காங்கிரஸ் கட்சியில் இணைத்தார் அவரது மகன் ஜி.கே.வாசன், இதற்கு பலனாக காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. மேலும் காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சர் பதவியும் ஜி.கே.வாசனுக்கு அளிக்கப்பட்டது.
காங்கிரஸ் டூ தமாகா
2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்த நிலையில், தமிழகத்தில் உட்கட்சி மோதல் தொடர்ந்து அதிகரித்தது. இதன் காரணமாக அங்கிருந்து விலகிய ஜி.கே.வாசன் மீண்டும் தமாகவை தொடங்கினார். ஆரம்பத்தில் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நிலையில், அங்கு காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் ஜி.கே.வாசன் அதிமுக அணியில் இணைந்தார். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக பாஜகவுடன் சேர்த்து போட்டியிட்ட போதும் ஜி.கே.வாசன் தொடர்ந்து கூட்டணியில் இருந்து வந்தார்.
பாஜக கூட்டணியில் ஜி.கே.வாசன்
இதன் காரணமாக ஜி.கே.வாசனோடு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிவர்கள் அவரின் செயல்பாடுகள் திருப்தி அளிக்காத காரணத்தால் அங்கிருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக- பாஜக கூட்டணி உடைந்தது. எனவே காங்கிரஸ் பாரம்பரியத்தை சேர்ந்த ஜி.கே.வாசன் அதிமுகவுடன் செல்வார் என கூறப்பட்டது. ஆனால் பாஜக அணியில் இணைந்தார். இதனால் அதிருப்தி அடைந்த தமாக நிர்வாகிகள் கூட்டமாக திமுக, காங்கிரஸ் கட்சிக்கு படையெடுத்தனர்.
பாஜகவில் இணைய திட்டமா.?
இந்த நிலையில் ஜி.கே.வாசனின் எம்பி பதவி காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவடையவுள்ளது. எனவே தற்போதே ராஜ்யசபா எம்பி பதவியை மீண்டும் பெற ஜி.கே.வாசன் காய் நகர்த்தி வருகிறார். அந்த வகையில் இன்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது ராஜ்யசபா சீட் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மற்றொரு தரப்பில் தமாகவை பாஜகவில் இணைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக எந்தவித தகவலையும் உறுதிப்படுத்தாக ஜி.கே.வாசன் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.