தவெக தலைவராக விஜய்.! அரசியலில் ஓராண்டில் சாதித்தது என்ன.? செய்தது என்ன.?
தமிழகம் மட்டுமல்ல பல்வேறு மாநில ரசிகர்களையும் தன்னுடைய நடிப்பால் ஈர்த்தவர் நடிகர் விஜய், நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமாக விஜய் ஜனநாயகன் வரை 69 படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தனது திரைப்படத்தின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் பேசிய விஜய், தற்போது அரசியல் களத்தில் முழுமையாக இறங்கியுள்ளார். அந்த வகையில் கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியவர் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என அறிவித்தார்.
அரசியல் களத்தில் விஜய்
நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன் என விஜய் தெரிவித்தார். இந்த ஒரு வருட காலத்தின் அரசியலில் விஜய் செய்தது என்ன என்பதை தற்போது பார்க்கலாம். அதன் படி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கட்சியை தொடங்கியவர் அந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவும் இல்லை, போட்டியும் இல்லையென கூறி அமைதி காத்தார்.
சமூகவலைதளத்தில் வாழ்த்தும் கண்டனமும்
அடுத்தாக அவ்வப்போது சமூக வலைதளம் மூலம் ஒரு சில கருத்துகளை தெரிவித்து வந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை, கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் என தமிழக அரசுக்கு எதிராக கண்டனங்களையும் பதிவிட்டார். அதே நேரத்தில் அரசியல் தலைவர்களுக்கு வாழ்த்து, பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து என வாழ்த்து செய்தியை மட்டுமே அவ்வபோது பதிவு செய்து வந்தார். இதனையடுத்து தான் தவெகவின் முதல் மாநில மாநாட்டையும் அறிவித்தார். அதன் படி முதல் மாநாட்டை செம்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டது.
முதல் மாநாட்டில் அசத்திய விஜய்
ஆனால் காவல்துறை அனுமதி உள்ளிட்ட காரணங்களால் மாநாடு அக்டோபர் மாதம் நடத்தினார். இந்த மாநாட்டில் பல லட்சம் பேர் திரண்டு விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்தனர். தனது அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த விஜய் அடுத்ததாக அரசியல் களத்தில் தீவிரமாக இறங்குவார் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. அந்த வகையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அப்பகுதிக்கே சென்று சந்திக்காமல் தனது பனையூர் இல்லத்திற்கு அழைத்து நிவராண உதவிகளை வழங்கினார்.
ஆளுநர், பரந்தூர் - களத்தில் விஜய்
இது மட்டுமில்லாமல் அரசியல் தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாளுக்கு வெளியில் வந்து சிலைகளுக்கு மாலை அணிவிக்காமல் வீட்டில் இருந்தே படங்களுக்கு மாலை அணிவித்து புகைப்படம் மட்டும் வெளியிடப்பட்டது. இதனை நெட்டிசன்கள் தவெக தலைவர் வொர்க் பிரம் ஹோம் போல வொர்க் பிரம் பாலிடிக்ஸ் என கிண்டல் செய்தனர், இந்த சூழ்நிலையில் தான் முதல் முறையாக ஆளுநர் ரவியை நேரடியாக சந்தித்து அண்ணா பல்கலை மாணவர் விவகாரம், வெள்ள நிதி நிவாரணம் தொடர்பாக மனு கொடுத்தார்.
என்ன செய்ய போகிறார் விஜய்.?
அடுத்ததாக பரந்தூர் பகுதியில் 900 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சந்திக்கும் ஆதரவு தெரிவித்தார். தற்போது கட்சியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்து வருகிறார். எனவே வரும் ஆண்டு விஜய்யின் அரசியலுக்கு முக்கிய ஆண்டாக அமையும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் என்ன செய்ய போகிறார் விஜய் என அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்று பொதுமக்களும் காத்துள்ளனர்.