தீபாவளி கொண்டாட்டம்
தீபாவளி பண்டிகை என்றால் கேட்கவா வேண்டும் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுவும் இந்த ஆண்டு தீபாவளிக்கு எப்போதும் இல்லாத வகையில் 4 முதல் 5 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் மக்கள் சொந்த ஊரை நோக்கி சென்றுள்ளனர். காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, கோயில்களுக்கு சென்று சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசு தான்.
அதிகரித்த காற்று மாசு
அந்த வகையில் இந்தாண்டு பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்டாசு விற்பனை நடைபெற்றுள்ளது. இதனை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பட்டாசு சத்தம் தொடர்ந்து கேட்டு வருகிறது. மேலும் நேற்றே சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசு சார்பாக பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி,
பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள்
காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக்காக்க, பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும். குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.
உத்தரவை மீறினால் நடவடிக்கை
மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.