Heavy Rain
தொடங்கியது வட கிழக்கு பருவ மழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. அடுத்ததாக வட மாவட்டங்களில் மழையானது வெளுத்து வாங்கியது. குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பெய்த கன மழையானது தற்போது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொட்டி வருகிறது. நேற்று முன் தினம் பெய்ய தொடங்கிய மழை நேற்று இரவு வரை விடாமல் பெய்தது. இதனால் சென்னை மக்களுக்கு டிசம்பர் மாத நிகழ்வுகள் நினைவுக்கு வந்து சென்றது. அந்த அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
rain in chennai
சென்னைக்கு ரெட் அலர்ட்
குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கார்களை பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தினர். இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன் நேற்று இரவு கூறுகையில், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 490 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் நாளை அதிகாலை கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். அப்போது மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டது.
சென்னை மக்களுக்கு குட் நியூஸ்
இதனிடையே நேற்று இரவு முதல் சென்னையில் மழை குறைந்துள்ளது. லேசான சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. இதனால் சாலையில் தேங்கியிருந்த மழை நீர் வடிந்தது. வாகன போக்குவரத்தும் சீரடைந்து வருகிறது. இந்தநிலையில் மழை நிலவரம் தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் நல்ல செய்தியாக சீரான மழை சிறிது நேரம் தொடரும் என தெரிவித்துள்ளார். மேலும் காற்றழுத்த தாழ்வு நிலை சென்னையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், காற்று கடக்கும் பகுதிக்கு வடக்கே இருக்கும் என்பதால் சென்னை மக்கள் சற்று நிம்மதி அடையலாம் என தெரிவித்துள்ளார்.
tamilnadu rain
மேம்பாலங்களில் இருந்து கார்களை எடுக்கலாம்
மேலும் காற்றழுத்த தாழ்வுநிலை கரையை கடக்கும் போது கனமழை பெய்ய வாய்ப்பு குறைவு. சாதாரண மழை பெய்யலாம்!! கன மழைக்கான வாய்ப்பு தெற்கு ஆந்திராவுக்கு மாறிவிட்டது.சென்னையில் வருகிற 18-20 தேதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலத்தில் நகரும் போது, சாதாரணமாக சமாளிக்கக்கூடிய மழையாக இருக்கும்.
எனவே மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட வாகனத்தை வீட்டிற்கு கொண்டு வரலாம் என சென்னை மக்களுக்கு குட் நியூஸ் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களில் சென்னையில் சில இடங்களில் 30 செமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.