Vegetable Price
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டி வரும் நிலையில் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் தங்களுக்கு தேவையான உணவு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முன்கூட்டியே வாங்கி தங்கள் வீடுகளில் இருப்பு வைத்துள்ளனர்.
Vegetable Price
இதன் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளை வாங்க மக்கள் அதிகம் வராத நிலையில் தக்காளி உள்பட பல காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை குறைந்துள்ளது. இது தொடர்பாக கோயம்பேடு காய்கறி சந்தை மொத்த விற்பனையாளர் கூறுகையில், “பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகள் இயல்பான அளவில் தான் இன்றும் வந்துள்ளன. ஆனால், மழை எச்சரிக்கை காரணமாக மக்கள் முன்னதாகவே தங்களுக்கு தேவையான காய்கறிகளை இருப்பு வைத்துக் கொண்டனர்.
Vegetable Price
இதனால் சந்தையில் பல காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. குறிப்பாக 2 தினங்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் கிலோ ரூ.150க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.70 குறைந்து ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேரட் ரூ.50 - 60, வெண்டைக்காய் ரூ.40 - 50க்கு விற்கப்படுகிறது. ரூ.250க்கு விற்கப்பட்ட பீன்ஸ் இன்று ரூ.150க்கு விற்கப்படுகிறது. இதே போன்று பல காய்கறிகள் ரூ.20 முதல் ரூ.50 வரை குறைந்து விற்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
Vegetable Price
மழை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் காய்கறிகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், மழை குறைந்து இயல்பு நிலை திரும்பும் பட்சத்தில் காய்கறிகளின் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.