திமுக எம்.எல்.ஏ.வின் கொடூர செயலுக்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது.
குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24X7 செய்தித் தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்திய வீடியோ, அண்மையில் வெளியானது.
ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
அதற்குப் பிறகும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்காமல், வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் முதல்வர் அவர்கள் இருக்கிறார் என்பது வெட்கக் கேடானது. பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, பொதுவெளியில் இவ்வளவு மோசமாகச் செயல்படுவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு இன்னுமொரு சான்றாகும்.