Published : Feb 26, 2025, 01:30 PM ISTUpdated : Feb 26, 2025, 01:41 PM IST
பிரசாந்த் கிஷோர், விஜய்யின் தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவித்து, அது ஒரு புதிய அரசியல் இயக்கமாக உருவெடுக்கும் என்று கூறியுள்ளார். மேலும், அடுத்த தேர்தலில் தவெக வெற்றி பெற்றால், பலர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவார்கள் என்றும் உறுதியளித்துள்ளார்.
தவெக 2-ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்த தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி. கடந்த சில வாரங்களாக தவெக மற்றும் பிரசாந்த் கிஷோர் குறித்து பல்வேறு கருத்துகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்றுள்ளேன். வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தவெகவுக்கு கிடைக்கும் வெற்றி என்பது பிரசாந்த் கிஷோருக்கும் வெற்றிக்கும் எந்த தொடர்பும் இல்லை. தவெகவின் ஒவ்வொரு உறுப்பினரின் உழைப்புக்கும் கிடைக்கும் பரிசு தான் வரும் தேர்தலில் கிடைக்கும் வெற்றி.
25
Prashant Kishor
தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கையாக விஜய் உள்ளார். தமிழ்நாடு பல துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. இது மாற்றத்திற்கான நேரம். விஜய் தலைமையில் மாற்றம் உருவாகும். தவெக தொண்டர்களின் தேர்தல் பணிக்கு நான் உறுதுணையாக இருப்பேன். கடந்த 4 ஆண்டுகளாக தேர்தல் வியூக வகுப்பாளர் பணியை நான் செய்யவில்லை. கடந்த 2021-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு கட்சிக்கு பணியாற்றினேன். அதே போல் மேற்கு வங்கத்திலும் ஒரு கட்சிக்கு பணியாற்றினேன். அதன் பிறகு யாருக்கும் தேர்தல் பணியாற்றவில்லை. எனது ஓய்வை அறிவித்தேன். 4 ஆண்டுகளுக்குப் பிறகு நான் இப்போது ஏன் இங்கு வந்துள்ளேன்? எனது தேர்தல் வியூகம் தவெகவுக்கு தேவையில்லை. ஆனால், எனது நண்பரும், சகோதரருமான விஜய்-க்கு உதவ வந்துள்ளேன்.
என்னைப் பொருத்தவரை விஜய் ஒரு தலைவர் அல்ல. ஆனால், தமிழ்நாட்டின் நம்பிக்கை அவர். அதேபோல் தவெகவை நான் அரசியல் கட்சியாக பார்க்கவில்லை. அதனை ஒரு புதிய அரசியல் இயக்கமாக பார்க்கிறேன். தமிழ்நாட்டில் கடந்த 30 முதல் 35 ஆண்டுகளாக என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அதனை மாற்ற வேண்டிட நேரம் இது. விஜய் தலைமையிலான தவெக அந்த மாற்றத்தை தமிழ்நாட்டில் கொண்டு வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
45
Election strategist Prashant Kishor
தமிழ்நாடு அரசியலைப் பற்றி எனக்கு ஓரளவு தெரியும். அது தொடர்பாக ஆய்வு செய்துள்ளேன். அதனால் உங்களுக்கு ஒரு வாக்குறுதியை தருகிறேன். அடுத்த தேர்தலில் தவெக வென்றால், இங்கு உட்கார்ந்து இருக்கக் கூடிய பலர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆவீர்கள். இதனை நான் எழுத்துப்பூர்வமாகவும் தருகிறேன். தவெக 2026 தேர்தலில் வெற்றி பெற்றதும் நான் இங்கு வருவேன். அப்போது தமிழில் பேசுவேன். நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நான் தேர்தல் வியூக வகுப்பாளர் பணியை செய்துள்ளேன். ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு விதமான பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. கல்வி சார்ந்த விஷயங்களில் குஜராத் மாடல் என்பது சிறந்தது என்பது எனது கருத்து. வளர்ச்சித் தொடர்பான விஷயங்களில் தமிழ்நாடு மாடல் சிறந்தது. ஆனால், ஊழல், மதவாதம் மற்றும் வாரிசு அரசியல் ஆகியவற்றில் தமிழ்நாடு மாடல் சிக்கியுள்ளது.
வாரிசு அரசியலை நாம் அத்தனை கவலைக்குரியதாக நினைக்கவில்லை. நீங்கள் யோசித்துப் பாருங்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவின் மகன்கள் மட்டுமே கிரிக்கெட் ஆட வேண்டுமென்றால் சச்சினும் தோனியும் கிரிக்கெட் ஆடியிருக்க முடியுமா? தமிழகத்தில் பீகாரைச் சேர்ந்த பிரபலமான மனிதர் என்றால் தோனிதான். ஆனால், அடுத்த ஆண்டு தோனியை விட நான் பிரபலமானவன் ஆகிவிடுவேன். சென்னை சூப்பர் கிங்ஸை வெல்ல வைத்த தோனியோடு இந்த த.வெ.கவை வெல்ல வைக்கப்போகும் பிரஷாந்த் கிஷோர் போட்டிப்போட போகிறேன் என்றார்.