TVK Vijay Campaign: நாகை தேர்தல் பிரசாரத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், தான் களத்து வருவது புதுசு இல்லை என்றும் 14 ஆண்டுகளுக்கு முன்பே களத்துக்கு வந்து விட்டதாகவும் விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தவெக தலைவர் விஜய், நாகப்பட்டினம் புத்தூரில் அண்ணா சிலை அருகில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் நாகை மாவட்டத்தில் உள்ள தீர்க்கப்படாத பிரச்சனைகள், மீனவர்கள் பிரச்சனை ஆகியவற்றை பேசினார். மேலும் தன்னுடைய தேர்தல் பிரசாரத்துக்கு திமுக அரசு கடுமையான நெருக்கடி கொடுப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
24
நாகையில் விஜய் தேர்தல் பிரசாரம்
தொடர்ந்து 'விஜய் இப்போது தான் களத்துக்கு வருகிறார்' என்று அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கும் பதிலடி கொடுத்தார். இது தொடர்பாக நாகை பிரசாரத்தில் பேசிய விஜய், ''இலங்கை கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவதையும், அதற்கான காரணத்தைப் பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் மதுரை மாநாட்டில் நான் பேசியது அவ்வளவு பெரிய குற்றமா? மீனவர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுக்காக நிற்பதும் நம்முடைய கடமை. நம்முடைய உரிமை.
34
2011ம் ஆண்டிலேயே களத்துக்கு வந்துட்டேன்
நான் என்ன இன்று நேற்றா அவர்களுக்காக குரல் கொடுக்கிறேன், இதே நாகப்பட்டினத்தில் 14 ஆண்டுகளுக்கு முன்பு 2011 பிப்ரவரி 22 ஆம் ஆண்டு மீனவர்கள் தாக்கப்பட்டதற்காக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் நான் வந்து கலந்து கொண்டேன். இந்த விஜய் களத்துக்கு வர்றது ஒன்னும் புதுசு இல்ல கண்ணா. விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் இயக்கமாக வந்து இன்று நிற்கிறேன். இன்றும் அன்றும் என்றும் மக்களுக்காக நிற்பது தான் எனது கடமை. இது புரிபவர்களுக்கு புரிந்தால் சரி'' என்று தெரிவித்தார்.
நடிகர் விஜய் தவெக என்ற கட்சியை தொடங்கியது முதல் அவர் மீது வைக்கப்படும் முதன்மையான விமர்சனம் 'இத்தனை நாள் மக்களுக்கு பிரச்சனை நடந்தபோது விஜய் எங்கு இருந்தார்? மக்களுக்கு ஆதரவாக எந்த போராட்டமும் நடத்தாமல் நேரடியாக முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதா?' என்பது தான்.
குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 'நாங்கள் பல ஆண்டுகளாக மக்களுடன் களத்தில் இருக்கிறோம். மக்களுக்காக குரல் கொடுத்தோம். ஆனால் விஜய் என்ன செய்தார்?' என தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைக்கிறார். இப்போது விஜய், 'நான் 2011 லேயே களத்துக்கு வந்து விட்டேன்' என கூறியிருப்பது சீமானுக்கு கொடுத்த பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.