TVK Vijay
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்ட நிலையில் பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து விளைநிலங்கள், நீர்நிலைகள் உட்பட 5,133 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த 910 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அப்பகுதி மக்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும் களம் இறங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அப்பகுதி மக்களை நேரடியாக சந்திக்க பரந்தூர் பகுதிக்கு சென்றார். இதனையடுத்து போலீசார் அனுமதி கொடுத்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று காலை பரந்தூர் வந்த விஜய்க்கு அவரது ரசிகள், தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள மக்களை சந்திக்க திருமண மண்டபத்திற்கு திறந்த வேனில் சென்றார். அப்போது அவர்களுக்கு மத்தியில் பேசிய அவர், 910 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறீர்கள். இந்த பகுதியில் உள்ள ராகுல் என்ற சிறுவன் பேசிய பேச்சு எனது மனதை பாதித்தது.
உங்களுடைய ஆசிர்வாதத்தோடு இங்கிருந்து நான் எனது பயணத்தை தொடங்குகிறேன். மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கையை எடுத்துச் சொன்னேன். அதில் ஒன்றுதான் இயற்கை வள பாதுகாப்பு. மாநாட்டு தீர்மானத்திலேயே இயற்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் திட்டம் செயல்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பரந்தூர் பகுதியில் 13 நீர்நிலைகளை அழித்து சென்னையில் நிரந்தர வெள்ளக்காடாக மாற்றப்படவுள்ளது. விவசாயிகளுக்கு பாதிக்கப்பட்ட திட்டங்களுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்.
இந்த பிரச்சனையில் மக்களுக்காக துணையாக இருப்பேன். மத்திய மாநில அரசுகளுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. இந்த பகுதியில் இந்த திட்டம் வேண்டாம் என்றுதான் கூறுகிறேன். பூமி வெப்பமயமாதல் நம்மை பயமுறுத்திக் கொண்டுள்ளது. 90% நிலங்களே அழித்துக் கொண்ட வருகின்ற இந்தத் திட்டத்தை எதிர்க்கிறோம்.
அரிட்டாபட்டி மக்கள் எப்படி நம்ம மக்களோ அதேபோலதான் பரந்தூர் மக்களும் நமது மக்கள். இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் விமான நிலையம் கொண்டு வருகிறோம் என்று சொல்கிறார்கள் என்றால் விமான நிலையம் வருவதால் அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் உள்ளது. அதனை மக்கள் தெளிவாக புரிந்து வைத்துக் கொண்டுள்ளார்கள்.
எதிர் கட்சியாக இருக்கும் பொழுது 8 வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு, காட்டுப்பள்ளி துறைமுகத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தீர்கள் என திமுகவிற்கு கேள்வி எழுப்பியவர், எதிர் கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது விவசாயிகளுக்கு எதிர்ப்பா.? என கேள்வி எழுப்பினார்.
எனவே இதனை பார்த்துக்கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டாங்க, உங்கள் நாடகத்தைப் பார்த்துக் கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். நம்புவது போல் நாடகமாடுவது தான் நீங்கள் கில்லாடி ஆனவர்கள் தானே என விமர்சித்தார்.
எனவே விமான நிலையத்திற்காக ஆய்வு செய்த நிலத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். விவசாய நிலம் இல்லாத பாதிப்பு குறைவாக உள்ள இடங்களை பார்த்து விமான நிலையம் கொண்டு வாருங்கள். வளர்ச்சிதான் மக்களின் முன்னேற்றம். வளர்ச்சி என்ற பெயரில் மக்களை அழித்து விடாதீர்கள். ஏகனாபுரம் பகுதியில் மக்களை சந்திக்க வேண்டும் என திட்டமிட்டேன் ஆனால் ஊருக்குள்ள வர அனுமதி இல்லை. நம்பிக்கையோடு இருங்கள் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என விஜய் பேசினார்.