vijay eps stalin
அரசியலில் விஜய்
தமிழ் திரைத்துறையில் கலக்கி வருபவர் நடிகர் விஜய், அரசியல் மீதான ஆர்வம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் தொடர்பான பஞ்ச் வசனங்களை தனது திரைப்படங்களில் இடம்பெற செய்தார். எனவே எப்போது அரசிலுக்கு வருவர் என எதிர்பார்த்த மக்களுக்கு தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி பிரம்மாண்ட அளவில் மாநாட்டையும் நடத்தி முடித்துள்ளார். அந்த வகையில் தங்களது இலக்கு 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் என அறிவித்துள்ளார். எனவே மக்களவை தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என எதிலும் பங்கேற்கவில்லையென கூறியிருந்தார்.
Erode
ஈரோடு இடைத்தேர்தல்
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நிலை பாதிப்பு காரணமாக கடந்த மாதம் காலமானார். இதனையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு டெல்லி சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தது. இதன் படி பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த தேர்தலில் திமுக சார்பாக சந்திரகுமார் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பாக சிவகாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
seeman and vijay
சூடு பிடிக்கும் இடைத்தேர்தல்
இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு மற்ற கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என அதன் தலைமை நிர்வாகிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். குறிப்பாக அதிமுக, பாஜக, தவெக ஆகிய கட்சிகள் ஆதரவு தரும் என எதிர்பார்த்து காத்துள்ளது. இந்த நிலையில் சீமானுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லையென தவெக அறிவித்துள்ளது.
vijay
விஜய் நிலைப்பாடு என்ன.?
இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதான இலக்கு என்றும், அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
tvk vijay
போட்டி இல்லை- ஆதரவும் இல்லை
மேலும் தமிழ்நாட்டில் ஆளும் அரசுகள் ஜனநாயக மரபுகளைப் பின்பற்றாமல் தங்களின் அதிகார பலத்துடன் பொதுத் தேர்தல்களைக் காட்டிலும், ஜனநாயகத்திற்கு எதிராகப் பலமடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது வழக்கம் என்பதையே கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
அதனடிப்படையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதோடு, எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின்பேரில் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.