
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட கன்னட அமைப்புகள் தடை விதித்திருந்த நிலையில், நீதிமன்றம் கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க வலியுறுத்தியது. ஆனால் இதனை கமல் மறுத்த நிலையில், தக்லைப் திரைப்பட வெளியீடு கர்நாடகாவில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டின் மாபெரும் கலைஞன் கமல்ஹாசன் 'தக் லைப்' என்ற திரைப்படம் வரும் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், கன்னட நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து, 'தமிழில் இருந்து பிறந்ததுதான் உங்கள் கன்னட மொழி' என்று கமல்ஹாசன் கூறியிருந்தார்.
வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி, கமல்ஹாசன் பேசியது சரியே! ஆனால், கர்நாடகத்தில் உள்ள கன்னட அமைப்புகள் தமிழ், தமிழர்களுக்கு எதிரான இன வெறியைத் தூண்டும் நோக்கத்துடன் கமல்ஹாசன் உறவாகப் பேசிய செய்திகளை தவறாக சித்தரித்து கர்நாடத்தில் ஒட்டப்பட்டிருந் தக் லைஃப் திரைப்பட சுவரொட்டிகளையும்,
பேனர்களையும் கிழித்தெறிந்து நடத்திய போராட்டங்களைக் நடத்திக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் கூறி வருகின்றன. கன்னட சினிமா வர்த்தக சபையும் மன்னிப்பு கோராவிட்டால் படத்தை திரையிட அனுமதி கிடையாது எனக் கூறியுள்ளது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கர்நாடக உயர்நீதிமன்றத்திர். திரைப்படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா, கமல்ஹாசன் தரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதாவது, கமல்ஹாசன் என்ன வரலாற்று ஆய்வாளரா? மொழியியல் வல்லுநரா? தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிந்து இருக்கும். கமல்ஹாசனோ அல்லது வேறு யாராக இருந்தாலும் மக்களின் உணர்வுகளை புண்படுத்த கூடாது. கன்னடம் தமிழில் இருந்து வந்ததற்கான ஆதாரம் உள்ளதா? என பல்வேறு கேள்விகளை நீதிபதி நாகபிரசன்னா எழுப்புகிறார்.
கமல்ஹாசன் ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கும். பேசிய கருத்தை திரும்ப பெற முடியாது; மன்னிப்பு கேட்காவிடில் கர்நாடகாவில் படம் ஓட வேண்டும் என ஏன் நினைக்கிறீர்கள்? மன்னிப்பு ஒன்று தான் தீர்வு! இது தான் நீதிபதி நாகபிரசன்னாவின் கேள்விகள். அவர் நீதிபதியாக இல்லாமல், ஒரு கன்னடராக இருந்து அக்கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கமல்ஹாசன் பேசிய விவகாரத்தில், தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் தான், கர்நாடகத்தில் காங்கிரசு முதலமைச்சர் சித்தராமையாவும், பாஜக மாநிலத் தலைவரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தான் நீதிபதி நாகபிரசன்னாவும் பேசியிருக்கிறார். இது தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை உருவாக்கி தமிழர் எதிர்ப்பை மேலும் மேலும் தூண்டி விடுகின்ற செயலாகும்.
நீதிபதியாக இருப்பவர்களுக்கு மொழி, இனம், மதம் வேறுபாடு கிடையாது என்பார்கள். ஆனால், நாகபிரசன்னா ஒரு கன்னடராக மட்டுமே இருந்து தீர்ப்பளித்துள்ளார். அவரது இனப்பற்றை போற்றுகிறோம். கர்நாடகாவில் இதுவரை தமிழர்களுக்கு நீர் தான் மறுக்கப்பட்டு வந்தது. இப்போது நீதியும் மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால், நீதிபதி நாகபிரசன்னா கடந்த கால வரலாற்றை மறந்து விட்டு பேசியுள்ளார். எனவே, கமல்ஹாசன் நடித்துள்ள தக்ஃலைப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியாக தடை இருக்கும் பட்சத்தில், இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் எந்தவொரும் கன்னட திரைப்படமும் வெளியாகாது. அதே நேரத்தில், தமிழ் திரைப்படத்துறையில் உள்ள சங்கங்கள் முன் வந்து, கர்நாடகாவில் கமல்ஹாசன் நடித்துள்ள தக்ஃலைப் திரைப்படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
அப்படி இல்லையென்றால், தமிழ் திரைப்படங்களில் கன்னட நடிகர்களையோ, தொழில்நுட்ப கலைஞர்களையோ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.மாபெரும் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். இவ்விவகாரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தங்களுக்கு உறுதுணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்விவகாரத்தை பயன்படுத்தி கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், கர்நாடக தமிழர்களின், தமிழ்நாட்டு தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி எதிர்வினையாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்பதை எச்சரிக்கையோடு கூறிக்கொள்கிறேன் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.