வளைச்சு வளைச்சு அடிக்கும் வடகிழக்கு பருவமழை! வழியிலும் வைகை அணை! 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published : Oct 21, 2025, 01:30 PM IST

Vaigai Dam Floods Alert: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியுள்ளது. இதனால், தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

PREV
14
வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட தேனி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 4 நாட்களாக கொட்டி தீர்த்து வரும் கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் அணை நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்தது.

24
வைகை அணை

71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் கடந்த 18ம் தேதி 66 அடி எட்டிய போது, 5 மாவட்ட மக்களுக்கு முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு முதல் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியதால் இன்று அதிகாலை வைகை அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதையடுத்து இன்று அதிகாலை அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியது.

34
வெள்ள அபாய எச்சரிக்கை

இதனைத் தொடர்ந்து கரையோர மக்களுக்கு 2 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை மக்களுக்கு அறிவிக்கும் வகையில் அணையின் மதகுப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சங்கு மூன்று முறை ஒலிக்க விடப்பட்டது. அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணை 69 அடியை எட்டியது தீபாவளி நாளான நேற்று வைகை அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. கரையோர மக்களை பாதுகாப்பாக வைக்கும் படி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகங்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

44
5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

இந்நிலையில் தற்போது அணை நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால் மூன்றாம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்ட வைகை ஆற்று கரையோர மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்றும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் பொதுப்பணித்துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 5,793 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு பாசனத்திற்காக ஏற்கனவே சென்று கொண்டிருந்த 1350 கன அடி தண்ணீர் உடன் சேர்த்து தற்போது ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு மொத்தமாக 2350 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories