Udhayanidhi Stalin vs CM Vijay : முந்தைய திமுக ஆட்சியின் ஊழல் ஃபைல்கள் தன்னிடம் இருப்பதாக சொல்லும் முதல்வர், அதை வெளியிடத் தயங்குவது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் சவால் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையேயான அரசியல் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் விவகாரங்களின் ஆவணங்களை வெளியிடுவது தொடர்பாக முதல்வர் பேசி இருந்தது பற்றி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள் இன்று அவையில் பரபரப்பை ஏற்படுத்தின.
சட்டசபையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய்யின் செயல்பாடுகளை விமர்சித்ததுடன், சட்டசபையை சினிமா பாணியிலான பஞ்ச் டயலாக் பேசும் இடமாக மாற்ற வேண்டாம் என்றும் கூறினார். முந்தைய திமுக ஆட்சியின் ஊழல் தொடர்பான ஆவணங்களை நேரம் வரும்போது வெளியிடுவேன் என்று முதல்வர் விஜய் ஏற்கனவே கூறியிருந்ததை சுட்டிக்காட்டிய உதயநிதி, அவற்றை வெளியிடுவதற்கு ஏன் காலதாமதம் செய்யப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார்.
ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருப்பதாக அரசு கருதினால், சம்பந்தப்பட்ட ஆவணங்களை வெளியிட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என உதயநிதி தெரிவித்தார். மேலும், ஃபைல்களை வெளியிடுவதற்காக ஜோசியரிடம் நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்களா என அவர் கிண்டலாக கேள்வி எழுப்பினார். இந்த கருத்துகள் அவையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடும் விவாதத்தை ஏற்படுத்தின.
முதல்வர் விஜய் இந்த விவகாரத்தில் நேரடியாக பதிலளிக்காத நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அரசின் நிலைப்பாட்டை விளக்கினார். ஊழல் தொடர்பான ஆவணங்கள் உரிய நேரத்தில் நிச்சயம் வெளியிடப்படும் என்றும், முதல்வர் வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிப்பவர் என்றும் அவர் தெரிவித்தார்.
34
திமுக - தவெக உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம்
உதயநிதியின் பேச்சைத் தொடர்ந்து திமுக மற்றும் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் தங்களது நிலைப்பாட்டை வலியுறுத்தியதால் அவையில் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் நிலவியது. பின்னர் நிலைமை சீரடைந்து சட்டசபை நடவடிக்கைகள் மீண்டும் நடைபெற்றன.
இந்த விவகாரத்தின் பின்னணியில், சில நாட்களுக்கு முன்பு சாலைப் பணிகள் தொடர்பான முறைகேடுகள் குறித்து சட்டசபையில் தவெக மற்றும் திமுக உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றிருந்தது. அப்போது, முந்தைய திமுக ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பான ஆவணங்களை உரிய நேரத்தில் வெளியிடுவேன் என்று முதல்வர் விஜய் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சில தினங்களுக்கு முன்னர் சட்டசபையில் முதல்வர் விஜய் பேசுகையில், சில எம்.எல்.ஏ.க்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்கு தவெக எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில், இன்று இந்த கார் விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அதன்படி, ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு நிதிச்சுமை அதிகமாக இருப்பதால், திமுகவின் எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம் என்கிற முடிவை எடுத்திருப்பதாக கூறினார்.