வேளச்சேரியில் போதை கும்பலால் சரமாரியான தாக்குதலுக்கு உள்ளான உணவு டெலிவரி செய்யும் ஊழியர் – பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் போதைக் கும்பல்களின் அட்டூழியத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “சென்னை வேளச்சேரி அருகே போதையில் சுற்றித்திரிந்த கும்பல், அப்பகுதியில் உணவு டெலிவரி செய்வதற்காக வந்த ஊழியர் ஒருவரை அரிவாளால் சரமாரியாகத் தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிப் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.
24
போதை பொருள் கலாசாரத்தை கட்டுப்படுத்தவில்லை
பேருந்து, ரயில், மற்றும் விமானநிலையங்கள் என பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதிகளில் சுற்றித் திரியும் போதைக் கும்பலைக் கண்காணிக்கவோ, அதற்கு அடிப்படைக் காரணமான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இதுபோன்ற துயரச்சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
34
பொதுவெளியில் நடமாடவே முடியாத சூழல்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை, இதுபோன்று தொடர்ந்து அரங்கேறும் குற்றச்சம்பவங்களுக்கும் தனக்கும் அதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல நடந்து கொள்வதால் பொதுமக்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் போதைக் கும்பல்களைப் பிடித்து அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகத்தின் தலைநகர் தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் தாராளப்புழக்கத்தை அடியோடு ஒழித்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.