TTDC has announced special discount tourism கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டதால் வீட்டிற்குள் மக்கள் முடங்கிக்கிடக்கும் நிலை உள்ளது. மேலும் பெரும்பாலான மாணவர்களுக்கு தேர்வு முடிவடைந்து பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போதே சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருகிறார்கள், ஊட்டி, கொடைக்கானல்,ஏலகிரி,ஏற்காடு என குளுமையான பகுதிகளுக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.
இது மட்டுமில்லாமல் அருவிகள், நீர்நிலைகள் உள்ள பகுதிகளுக்கும் புறப்பட திட்டமிட்டுள்ளனர். ஆனால் எப்படி செல்வது.? எங்கே தங்குவது என பல குழப்பமான நிலை உள்ளது.
அரசு ஊழியர்களுக்கு LTC சுற்றுலா
அந்த வகையில் தமிழக சுற்றுலாத்துறை பல வித சுற்றுலாக்களை எற்பாடு செய்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கும் விடுப்புப்பயண சுற்றுலாவை அறிமுகம் செய்துள்ளது. இதன் படி LTC எனும் விடுப்பு பயணச் சலுகை மூலம் சுற்றுலாவிற்கு அழைத்து செல்வதாக அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஒரு சலுகையாகும். அரசு ஊழியர்கள் உள்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்லலாம், இதற்கு ஆகும் செலவுகள் அனைத்தும் திருப்பி வழங்கப்படும் என்பதே LTC இன் முக்கிய அம்சம் என கூறப்படுகிறது.
குழு சுற்றுலா ஏற்பாடு
இதனிடையே சுற்றுலா திட்டங்களை தொடர்பாக சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரைநாள் முதல் 14 நாட்கள் வரையில் 52 வகையான தொகுப்புச் சுற்றுலாக்களை இயக்கி வருகிறது. குழுவாகச் செல்ல விரும்புகிற சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை நிறைவு செய்வதற்காக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அவர்களுக்கேற்ற ஆயத்த சுற்றுலாக்களையும் அரசு ஊழியர்களுக்கான விடுப்புப் பயணச் சலுகை சுற்றுலாக்களையும் (LTC) ஏற்பாடு செய்கிறது.
தொடங்கியது முன்பதிவு
சுற்றுலாப்பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் தங்களது கோடை விடுமுறையை முன்னிட்டு குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்கின்ற வகையில் 3 நாட்கள் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு- ஒகேனக்கல், குற்றாலம், மைசூர் பெங்களூர் மற்றும் மூனார் சுற்றுலாக்கள் போன்ற கோடைக்கால சுற்றுலா பயணத்திட்டங்கள்,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக இணையதளம் மூலம் முன்பதிவு தொடங்கப்பட்டு,
சுற்றுலா பயணிகளால் முன்பதிவுகள் நடைபெற்றுவருகிறது. மேலும் இக்கோடைக்கால சுற்றுலாக்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் கட்டணத்தில் சிறப்பு சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா திட்டம்
மேற்கண்ட சுற்றுலாக்களில், 3 நாட்கள் கொடைக்கானல் சுற்றுலாவில் 6 தொகுப்புகளில் இதுவரை 48 நபர்கள் முன்பதிவு செய்துள்ளனர். 3 நாட்கள் ஊட்டி சுற்றுலாவில் 5 தொகுப்புகளில் இதுவரை 41 சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல், 3 நாட்கள் மூனாறு சுற்றுலா தொகுப்பில் 2 தொகுப்புகளில் முன்பதிவு தொடங்கப்பட்டு, இதுவரை ஒரு தொகுப்பில் 9 சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து, இச்சுற்றுலா இயக்கப்பட்டுள்ளது. மற்றொரு தொகுப்பில் 4 சுற்றுலாப்பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
சுற்றுலாவிற்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மற்ற பயணத்திட்டங்களுக்கு முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com இணையதள பக்கத்திலும், அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூடுதல் விவரங்களை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தொலைபேசி எண்கள்: கட்டணமில்லா தொலைபேசி எண்.18004251111 044-25333333, 044-25333444 மற்றும் வாட்ஸ் அப் எண். 7550063121 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.