ரயில்களின் வேகம்
இந்தியாவில் ஏராளமான அதிவேக ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அந்த ரயில்களின் வேகத்துக்கு ஏற்ப வழித்தடங்களும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சென்னை - அரக்கோணம் - ஜோலார்பேட்டை, சென்னை - கூடூர் ஆகிய வழித்தடங்களில் அதிவிரைவு ரயில்கள் மணிக்கு 110 கி.மீ. முதல் 130 கி.மீ வரை வேகத்தில் செல்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் மற்றொரு முக்கிய வழித்தடமாக இருக்கும் சென்னை விழுப்புரம் விருத்தாசலம் திருச்சி பிரிவில் ரயில்கள் 90 கிமீ முதல் 100 கிமீ வரையிலான வேகத்திலேயே இயக்கப்படுகின்றன.
விழுப்புரம்-திருச்சி பிரிவு
இந்நிலையில், விழுப்புரம்-திருச்சி கோர்ட் லைன் பிரிவில் விருத்தாசலம், அரியலூர், லால்குடி மற்றும் ஸ்ரீரங்கம் வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை மணிக்கு 110 கி.மீட்டரிலிருந்து 130 கி.மீட்டராக அதிகரிக்கும் பணியில் தெற்கு ரயில்வே ஈடுபட்டுள்ளது. வடக்கு-தெற்கு திசையில் உள்ள ஒரு முக்கியமான பாதையாக இந்த கோர்ட் லைன் பிரிவு உள்ளது, இதன் மூலம் தமிழ்நாட்டின் மத்திய, தென்கிழக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களை அடைய பல எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள் தினமும் செல்கின்றன.