
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொலை களம் எனும் ஆவண படத்தை கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான திருமாவளவன் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், பீகாரில் ராகுல் காந்தியின் யாத்திரை பல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி எப்படி வாக்குகளைத் திருடுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்த ஒரு பயணமாக இது அமைந்திருக்கிறது. அதில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டிருப்பது மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் திட்டமிட்டு நம்மிடம் திணிக்கப்பட்ட தேர்தல். ஜகதீப் தன்கரை அச்சுறுத்தி பதவி விலக வைத்திருக்கிறார்கள். குடியரசு துணைத் தலைவருக்கே இந்த நிலையை பாஜக அரசு உருவாக்கி இருக்கிறது. இது வெட்கக்கேடானது, மேலும் அவரை வீட்டுக்காவில் சிறை வைத்திருக்கிறார்கள். வெளி உலகத்தை தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு உள்ளார். இது ஜனநாயகத்தை கேலி கூத்தாக அமைந்திருக்கிறது.
சிபி ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளார்கள். அவரின் கருத்து சுதந்திரம் கேள்விக்குறியாகவும், ஆர்எஸ்எஸ் அச்சுறுத்தலில் தான் செயல்படுவார். அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழிநடத்துவதில் எந்த தவறும் இல்லை என்று எல்.முருகன் தெரிவித்திருந்த நிலையில், எல் முருகன் ஆர்எஸ்எஸ் பாசறையில் வளர்ந்தவர். அவர் அப்படி கருத்து கூறுவதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. அதிமுக பெரியார் அண்ணா பாசறையில் வளர்ந்த அரசியல் இயக்கம் எம் ஜி ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் ஆர்எஸ்எஸ் பிஜேபி வளர்வதற்கு இடம் தரவில்லை என்கிற கருத்து வலுவாக உண்டு.
ஆனால் அவர்களை பின்பற்றும் இன்றைய தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்பது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த துணிச்சலில் தான் அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழி நடத்தினால் என்ன தவறு இருக்கிறது என்ற கேள்வி எழுப்பும் நிலை உருவாகி இருக்கிறது. இது எவ்வளவு பரிதாபகரமாக இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடியது இருக்கிறது.
ஆர் எஸ் எஸ் இங்கே வளர்வதற்கு அதிமுக மற்றும் இதர கட்சிகள் வாய்ப்பு அளிக்குமேயானால் அது தமிழ்நாட்டு மக்களுக்கு அளிக்கும் பெரிய துரோகமாக அமைந்துவிடும் என்பதை விசிக சுட்டிக்காட்டுகிறோம். மாநில அரசு மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டு செய்ய வேண்டுமே என்று கூறுகிறார்கள். பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு சர்வே மட்டுமே சொல்லியிருக்கிறார்கள்.
திருமாவளவன் திசை மாறி சென்று விட்டார் என்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகிறார். திருமாவளவன் திசை மாறி எந்த பக்கம் போய் விட்டேன்? சமூக நீதிப் பக்கம் போய் விட்டேனா? அதிமுக மீது எங்களுக்கு ஒரு மரியாதை உண்டு. அதிமுக திராவிட இயக்கம், பெரியாரிய இயக்கம், அண்ணா இயக்கம் என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கை அடிப்படையில் தான் கருத்துகளை முன்வைக்கிறோம்.
திமுக அல்லது அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் தலைமையில் தான் கூட்டணி அமைகிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் நம்மை போல் கட்சிகள் ஆதரவு தேவைப்படுகிறது. அந்த வகையில் அவர்கள் அதிகாரத்தை கூட்டணி கட்சிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஜனநாயகப்பூர்வமாக கோரிக்கை வைக்கின்றோம். ஆனால் அரசியலில் தாங்கள் எப்போது பலவீனப்படுகிறோமோ அப்போதுதான் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள முன்வருவோம் என்கிறார்கள் திமுக, அதிமுக.
இன்றைய சூழலில் திமுகவோ, அதிமுகவோ அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கக்கூடிய வகையில் மக்களின் ஆதரவை இழந்து நிற்கவில்லை என்கின்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த சூழலை நாம் உருவாக்கக்கூடிய செயல் திட்டம் எதிர்க்கட்சிகளிடையே இல்லை. ஒருவருக்கொருவர் காழ்ப்புணர்வு அடிப்படையில் விமர்சிக்கிறார்களே தவிர தொலைநோக்கு பார்வையுடன் கூட்டணி ஆட்சி எதிர்காலத்தில் உருவாக்கம் வேண்டும் இந்த சூழல் இப்போது கனியவில்லை.