கரூர் சம்பவத்தில் விஜய்யை நாங்கள் கைது செய்ய சொல்லவில்லை. அவர் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்துக்கு தவெகவும், அதன் தலைவர் விஜய் தான் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும், செந்தில் பாலாஜியின் சதி மற்றும் காவல் துறை பாதுகாப்பு இல்லாததே இந்த சம்பவத்துக்கு காரணம் என தவெகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
24
விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாததது ஏன்?
கரூர் சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட விஜய், 'தவெக தொண்டர்கள் மீது கைவைக்காதீர்கள். வேண்டுமென்றால் என்னை பழிவாங்குங்கள் சி.எம் சார்' என்று பேசியிருந்தார். விஜய்யின் பேச்சால் கொதித்தெழுந்த விசிக தலைவர் திருமாவளவன், ''கரூர் சம்பவத்துக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும்.
ஆனால் அவர் அதை விட்டு பாஜக இருக்கும் தைரியத்தில் முதல்வருக்கே சவால் விடுகிறார். விஜய் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யாததது ஏன்? தவெகவுக்கும், திமுகவுக்கும் அண்டர்டீலிங் உள்ளதா? என சந்தேகம் எழுகிறது'' என்று தெரிவித்து இருந்தார்.
34
யூ டர்ன் அடித்த திருமாவளவன்
இதன்பிறகு தான் பேட்டி கொடுக்கும் இடங்களில் எல்லாம் திருமாவளவன் விஜய்யை கடுமையாக சாடி வந்தார். இந்நிலையில், விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை. அவரை நாங்கள் கைது செய்ய சொல்லவே இல்லை என்று திருமாவளவன் தற்போது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ''விஜய்யை நாங்கள் கைது செய்ய ஒருபோதும் வற்புறுத்தவில்லை. அவர் மீது எங்களுக்கு எந்த வன்மும் இல்லை.
கரூர் சம்பவத்துக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும் என்று தான் தொடர்ந்து கூறி வருகிறோம். இந்த விவகாரத்தில் பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தான் அரசியல் செய்து வருகின்றன. திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் அரசியல் செய்யவில்லை.
கரூர் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கின்றன. விஜய்யை தங்கள் வலையில் சிக்க வைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. இந்த சதிகார, அதிகார சூழ்ச்சிமிக்க சக்திகளிடம் விஜய் சிக்காமல் சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.