தமிழக அரசியல்
தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் நாளுக்கு நாள் மாறி வருகிறது. அதன் படி ஆளுங்கட்சியாக உள்ள திமுகவிற்கு எதிராக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மேலும் திராவிட கட்சிகள் மட்டுமே தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சி அமைத்து வரும் நிலையில் இதனை மாற்ற பாஜக, தவெக, நாம் தமிழர் கட்சி களம் இறங்கியுள்ளது. இதனிடையே ஒரு கட்சியை விமர்சித்து மற்றொரு கட்சியானது பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டும்.
சென்னையில் போஸ்டர்
அதில் கட்சி பெயர், பொறுப்பு என பதிவிடப்பட்டிருக்கும் ஆனால் மக்களை கவரும் வகையிலும், மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையிலும் சென்னையில் பல்வேறு இடங்களில் மொட்டை கடிதாசி போல் மொட்டை போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் அண்டப்புளுகனோடு இனியும் இருக்கப்போவதில்லை, மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லையென போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பலரும் பார்த்து யாராக இருக்கும் என கேள்வி எழுப்பியபடி செல்கின்றனர்.
சீமானுக்கு எதிராக கட்சி நிர்வாகிகள்
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக அக்கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து கூண்டோடு விலகி வருகிறார்கள். சீமான் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும் யாருடைய பேச்சையும் கேட்பதில்லையென குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், கோவை என பல மாவட்ட நிர்வாகிகள் விலகியுள்ளனர். இந்த நிலையில் பெரியார் தொடர்பாக சீமான் கூறிய கருத்து தமிழக மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
போஸ்டர் ஒட்டியது யார்.?
ஆரம்பத்தில் பெரியாரை முன்னிலைப்படுத்தி பேசிய சீமான் தற்போது பெரியாருக்கு எதிராக தொடர்ந்து அவதூறு கருத்துகளை கூறி வருவதற்கு பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சீமான் வீடு முற்றுகை போராட்டமும் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தான் சீமானுக்கு எதிராக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மொத்தமாக விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நிர்வாகிகள் திமுகவில் இணைய இருப்பதாகவும் இதனையடுத்து தான் அண்டப்புளுகனோடு இனியும் இருக்கப்போவதில்லை, மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லையென போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.