நவீன காதல்- காதலி புகார்
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் காதல் என்பது மலையேறிவிட்டது. பார்த்த உடனே காதல், அடுத்த நிமிடமே ஊர் சுற்றுதல் என நவீன கால காதலாக மாறிவிட்டது. ஆசை தீர உல்லாசமாக இருந்துவிட்டு பிரேக் அப் செய்யும் நவீன காதலாகிவிட்டது. இப்படிப்பட்ட காதலால் இளம்பெண் ஒருவர் தனது வாழ்க்கையை இழந்து ஆட்சியர் அலுவலகத்தில் கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசை வார்த்தை கூறி ஏமாற்றம்
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் சினேகா கூறுகையில், கோவை மாநகர் செல்வபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை கடந்த 6 வருடங்களுக்கு மேல் காதலித்து வந்தாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி பல இடங்களுக்கு விக்னேஷ் தன்னை அழைத்து சென்றதாக கூறியுள்ளார். மேலும் பல இடங்களுக்கு ஊர் சுற்றியபோது ஓட்டல்களில் தனிமையில் ஒன்றாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
கர்ப்பத்தை கலைத்த காதலன்
விக்னேஷ் உடன் நெருக்கமாக பழகியதில் தனக்கு குழந்தை உண்டாகி 3மாதம் கர்ப்பிணியாக இருந்ததாகவும் அப்போது விக்னேஷின் பெற்றோர் தன்னை அழைத்து கர்ப்பத்தை கலைத்து விட்டால் விக்னேஷை திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறியதாகவும் அதனை நம்பி கர்ப்பத்தை கலைத்து விட்ட நிலையில் விக்னேஷின் பெற்றோர் திருமணத்திற்கு மறுத்து விட்டதாக தெரிவித்தார்.
திமுகவை சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கை இல்லை
இது தொடர்பாக போத்தனூர் மகளிர் காவல் நிலையத்திலும், கோவை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் தெரிவித்தார். திமுகவை சேர்ந்தவர் என்பதால் காவல் நிலையத்தில் புகாரை ஏற்க மறுக்கிறார்கள் என்றும் கூறினார்.இதனையடுத்து தான் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
விக்னேஷ் கைது செய்திடுக
விக்னேஷ் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் தற்பொழுதும் தன்னை மீண்டும் ஆசைக்கு இணங்குமாறு அழைத்து மிரட்டுவதாகவும் இல்லாவிட்டால் தாங்கள் காதலித்த போது எடுத்த புகைப்படங்கள் தனிமையில் இருந்த போது எடுத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என்று மிரட்டி வருவதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
எனவே தன்னை ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டம் விடுத்த விக்னேஷ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் சினேகா கேட்டுக்கொண்டுள்ளார்.